தனுஷுக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்த சூர்யா! 'ஓம்' படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்ததன் பின்னணி என்ன?

நடிகர் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷுக்கு அவர் பகிரங்கமாக நன்றி தெரிவித்த சம்பவம் தமிழ் திரையுலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'சீன்' திரைப்படத்துடன் தனது 'ஓம்' திரைப்படம் மோதுவதைத் தவிர்க்கும் வகையில் தனுஷ் எடுத்த முடிவுக்காகவே சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தை மலையாளத்தில் 'ஆவேஷம்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.

தமிழில் அவர் இயக்கும் முதலாவது திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய சூர்யா, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு 'ராமாயணம்', 'மூக்குத்தி அம்மன் 2' உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது நடிகர் தனுஷையும் குறிப்பிட்டு சூர்யா நன்றி தெரிவித்தமை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'சீன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், தனது திரைப்படத்தை வேறொரு திகதியில் வெளியிட விரும்புவதாக தனுஷ் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்ததை சூர்யா நினைவுகூர்ந்தார்.

அந்த முடிவுக்காக இசை வெளியீட்டு விழா மேடையிலேயே தனுஷுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனுஷ் மற்றும் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் – சாப்டர் 1: உதிரம் – தி பிளட் வுட்' திரைப்படம் ஆரம்பத்தில் ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்துடன் நேரடியாக மோதுவதைத் தவிர்ப்பதற்காக 'ஓம்' படத்தின் வெளியீடு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 'ஓம்' திரைப்படம் வெளியாகலாம் என்ற தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.

ஆனால், தீபாவளிக்கு சூர்யாவின் 'சீன்' திரைப்படம் ஏற்கெனவே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், அந்தத் திகதியில் தனது திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடவில்லை என்பதை தனுஷ் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'ஓம்' திரைப்படம் நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், தனுஷின் முடிவை மதித்து அவருக்கு சூர்யா பகிரங்கமாக நன்றி தெரிவித்திருப்பது தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் ஒதுக்கீடு, காட்சிகளின் எண்ணிக்கை மற்றும் வசூல் உள்ளிட்ட விடயங்களில் கடுமையான போட்டி ஏற்படுவது வழக்கமாகும்.

குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பல பெரிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், அவற்றுக்கிடையிலான வசூல் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

இந்தச் சூழ்நிலையில், தனுஷ் தனது திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை மாற்றியிருப்பதும், அதற்காக சூர்யா நன்றி தெரிவித்திருப்பதும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 'சீன்' திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஸீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை நஸ்ரியா சுமார் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கின்றார்.

அதேபோன்று மலையாளத் திரைப்படங்களின் மூலம் பிரபலமான நஸ்லென், இந்தப் படத்தின் ஊடாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகின்றார்.

'ஆவேஷம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள படம் என்பதால் 'சீன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகிவரும் 'சீன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷுக்கு சூர்யா தெரிவித்த நன்றி, தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.