எரிபொருள் விலை உயர்வை அடுத்து முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்வு... வெளியான தகவல்!

அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு நிகராக முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 120 ரூபாவாகவும், இரண்டாம் கிலோமீட்டரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாவாகவும் திருத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"கடந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டது; நாங்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தற்போது இந்த மாதமும் எரிபொருள் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கு இணையாக அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. தற்போது எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதும் பெரும் தட்டுப்பாடாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலினால் நாங்கள் எங்கு செல்வதென்று தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனைப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது முதல் கிலோமீட்டருக்கு 110 ரூபா அறவிடப்பட்டு வரும் நிலையில், அதனை 120 ரூபாவாகத் திருத்த வேண்டும். இரண்டாம் கிலோமீட்டரிலிருந்து இதுவரை அறவிடப்பட்டு வந்த 90 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்பதே எமது முன்மொழிவாகும்.

இந்த யோசனையை நாங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளோம். அடுத்த சில தினங்களில் அவர்களின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், கட்டண மீற்றர் திருத்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுடன் பேசி அடுத்தகட்ட முடிவை எடுக்க நேரிடும். இல்லாவிட்டால் எங்களால் தொழிலைத் தொடர முடியாது; நாம் முற்றாகவே நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்படுவோம்," என்றார்.