தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைத்து, பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிப்பது பல குடும்பங்களின் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இருப்பினும், பட்டாசுகளால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் புகை சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, சிறுவர்கள், முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டவர்களுக்கு பட்டாசுகளால் உருவாகும் காற்று மாசுபாடு மற்றும் அதிக ஒலி சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பொதுநல வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில், பட்டாசு பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளைத் தயாரிப்பதற்கும், பசுமைப் பட்டாசுகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.
அத்துடன், பட்டாசுகளால் காற்றின் தரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில், தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டிலும் காலை ஒரு மணித்தியாலமும் இரவு ஒரு மணித்தியாலமும் என மொத்தம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியை ஏற்படுத்தும், குறைந்தளவு காற்று மாசுபாட்டை உருவாக்கும் பசுமைப் பட்டாசுகளைத் தெரிவுசெய்யுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி பேணப்பட வேண்டிய பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காணப்படும் இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் முன் அனுமதியைப் பெற்று, பொருத்தமான திறந்தவெளிப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக அந்தந்தப் பகுதிகளில் செயற்படும் குடியிருப்பாளர் நலச்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பட்டாசு பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னெடுத்து வருகின்றது.
பாடசாலைகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கல்வித்துறை, பொலிஸ் துறை, மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அதிகாரிகள் இணைந்து செயற்படவுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்களின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவது அவசியம் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, பட்டாசுகளை வெடிக்கும்போது அரசாங்கம் அனுமதித்துள்ள நேர வரம்புகளைப் பின்பற்றுவதுடன், தீ விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைப் பயன்படுத்தி, அதிக ஒலி மற்றும் புகையைத் தவிர்த்து தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
