ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ‘கைவரு முத்து’ என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார, டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 6ஆம் திகதி காலை இலங்கையை வந்தடைந்த சந்தேகநபரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் கடுவெல, கொரத்தோட்டை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபருக்கு எதிராகப் பல்வேறு காலப்பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் சந்தேகநபருக்குத் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, 2016ஆம் ஆண்டு மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் நபர் ஒருவரை வெட்டியும் தாக்கியும் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு நவகமுவ பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, பின்னர் துனதஹேன பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடனும் சந்தேகநபருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் பங்கு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவகமுவ பொலிஸ் பிரிவில் 2024ஆம் ஆண்டு வர்த்தக நிலையமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், அதே ஆண்டில் கொரத்தோட்டை பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடனும் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக, தொலைபேசி அழைப்புகள் மூலம் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த சட்ட நடவடிக்கைகள் கடுவெல மற்றும் ஹோமாகம நீதவான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
