காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: நால்வர் கைது, விசாரணை தொடர்கிறது

இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகர மத்தியில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொட்டிங்ஹாம்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த பதினெட்டாம் திகதி அதிகாலை நான்கு மணி ஐம்பது நிமிடங்களளவில் ஏஞ்சல் ரோ பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரு சந்தேகநபர்களைப் பரிசோதிக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நொட்டிங்ஹாமின் ராட்ஃபோர்ட் பகுதியில் வாகனம் ஒன்றைச் சோதனையிட்ட காவல்துறை, இருபத்தேழு மற்றும் இருபத்தைந்து வயதுடைய இரு பெண்கள் மற்றும் இருபத்து நான்கு வயதுடைய ஆண் ஒருவரைக் கைது செய்தனர். அத்துடன், நேற்று அதிகாலை பெட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் முப்பது வயதுடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருபத்தேழு வயது பெண், கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்த முயன்றமை மற்றும் உயிராபத்தை விளைவிக்கும் நோக்கில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் குற்றவாளிக்கு உதவியளித்த சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியாகும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.