ஊத்துக்குளி அருகே ஒரு பெண் நர்சைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து உடலைக் காட்டுக்குள் வீசிய மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (27) என்பவர் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார். அவரது உறவினர் மகள் உத்திரா (26) என்பவருக்கும் இவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன்பின்னர், தம்பதியினர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்குச் சென்றார், உத்திரா அதே பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த பதினான்காம் தேதி அன்று காலை வழக்கம் போல் ரஞ்சித்குமார் உத்திராவை மருத்துவமனையில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார். பின்னர் அன்று இரவு மனைவியை அழைத்துச் செல்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது மருத்துவமனையில் வேலை பார்த்த ஊழியர்கள், "உங்கள் மனைவி ஏற்கனவே வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்" என்று தெரிவித்தனர். இதையடுத்து ரஞ்சித்குமார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டில் உத்திரா இல்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் மனைவியைத் தேடினார், இருப்பினும் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காட்டுக்குள் உள்ள முட்புதருக்குள் நர்சு உத்திராவின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற ரஞ்சித்குமார், மனைவியின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். அப்போது துக்கம் தாங்காமல் அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் ரஞ்சித்குமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உத்திராவை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

