இணைய வணிகம் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞர் ஒருவரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
டெலிகிராம் சமூக ஊடகம் ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணைய வணிகத்தின் மூலம் 12,691,033 ரூபாயை ஈட்ட முடியும் என ஆசைவார்த்தை கூறி, 151,000 ரூபாவைத் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த நிதி மோசடியில் தொடர்புபட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த இந்த 26 வயது சந்தேகநபர் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக சட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

