நாடு புகுந்து வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா – கண்களில் கருப்புத் துணி, கைகளில் விலங்குடன் வெளியான புகைப்படம்

இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குள், அவரது அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

நாடு புகுந்து வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா – கண்களில் கருப்புத் துணி, கைகளில் விலங்குடன் வெளியான புகைப்படம்

வெனிசுலாவின் தலைநகர் கரகாஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் வான்வழித் தாக்குதலைத் தொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, USS ஐவோ ஜிமா கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். 

இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குள், அவரது அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில், மதுரோவின் கண்கள் கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்து, கைகளில் விலங்கு போடப்பட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் அளித்த அறிக்கையில், வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமாக வெனிசுலா குடிமக்கள் அமெரிக்க நிலப்பரப்பிற்குள் நுழைவதும் தொடர்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கை நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவிய பதற்றத்தின் உச்சமாக அமைந்தது.

தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மதுரோ மற்றும் அவரது முக்கிய உதவியாளர் டில்லியன் ஃபுளோரஸ் ஆகியோர் வெனிசுலா மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கரகாஸில் உள்ள முக்கிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு தேடினர்.

டிரம்ப் தனது உரையில், “சட்டவிரோத அதிபர் மதுரோ, அமெரிக்க ராணுவத்தின் முன் மண்டியிட்ட வெனிசுலா இராணுவத்துடன் சேர்ந்து சரணடைந்தார். வெனிசுலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை அமெரிக்கா மறுசீரமைக்கும். புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே வெனிசுலாவை நிர்வகிக்கும். நீதியின் முன் மதுரோ நிறுத்தப்பட்டுள்ளார்,” என அறிவித்தார். மேலும், “அமெரிக்காவையும் பிராந்தியத்தையும் அச்சுறுத்திய மதுரோவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் வெனிசுலா மீது தாக்குதல் தேவையில்லை,” என்றும் கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், சில நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.