விஜய்யின் ‘வாரிசு’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

நடிகர் விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் வெளியானது - தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ள இப்படம் மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிட கால அளவைக் கொண்டுள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தமன் இசையமைத்துள் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீடு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

மேலும் தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ள இப்படம் மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிட கால அளவைக் கொண்டுள்ளது.

‘வாரிசு’ ட்ரெய்லர் எப்படி? 

 2.28 நிமிடங்கள் ஓடும் மொத்த ட்ரெய்லரும் சொல்வது ஒன்றைத்தான் அது ‘குடும்பம்’ முக்கியம். படம் சென்டிமென்டான கதைக்களத்தில் ஆக்‌ஷனை மையப்படுத்தி உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 

தொழிலதிபரான சரத்குமாரின் ‘வாரிசு’ ஆன விஜய் ஒருகட்டத்தில் தன் தந்தையின் இடத்தில் அமர்ந்து எதிராளிகளை சமாளிப்பது போன்ற கதைக்கருவை பிரதிபலிக்கும் ட்ரெய்லரில், ‘சீட்டோட ஹீட்டு என்னான்னு இனி பாப்ப’, ‘பவர் சீட்ல இருக்காது சார்; அதுல வந்து உட்கார்ரவன்கிட்ட தான் இருக்கும்’ போன்ற வசனங்கள் மேற்கண்ட கதையை உறுதி செய்கின்றன.

பஞ்ச் டயலாக்குகளில் விஜய் வழக்கமாக கையாளும் உடல்மொழியைக் காண முடிகிறது. இடையில் வரும் யோகிபாபுவின் காமெடி என்ற பெயரிலான டயலாக்கும் அதற்கு விஜய்யின் பதிலும் ஏமாற்றம். தாய்ப் பாசம், பழிவாங்கும் உணர்ச்சி, குடும்பம், ஆக்‌ஷன் என வழக்கமான கதையை பிரதிபலிக்கும் ட்ரெய்லரில் புதிதாக ஏதும் இல்லாதது அதிருப்தி. 

மேலும், ‘குடும்பம்னா குறை இருக்கும்தான்; ஆனா நமக்குன்னு இருக்குறது ஒரே ஒரு குடும்பம்தான்’ என்ற இறுதி வசனமும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் கடக்கிறது. ட்ரெய்லர் வீடியோ: