Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மணவாழ்வு மகிழ்ச்சிகரமான பயணமாக மாற சில உதவிக் குறிப்புகள் !

திருமணம் எவ்வளவுக்கெவ்வளவு பாதுகாப்பானதோ அதே அளவிற்கு சிக்கலானதும் கூட. ஒரு பக்கம் ஒருவரை உங்கள் வாழ்க்கை முழுதும் உங்கள் துணையாக கொள்வது சுகம் என்றாலும் அதே போல இன்னொரு பக்கத்தில் வாழ்நாள் முழுதும் உங்களுடன் வரப்போகிற ஒரு துணையை பொருத்தமாக தேர்ந்தேடுப்பது என்பது கடினமான விஷயம்தான்.

உங்கள் வாழ்நாள் என்பது மிக நீண்ட காலம். அதில் மாறக் கூடிய சூழ்நிலைகள் என்பது அடிக்கடி நிகழும் நிதர்சனம். ஆகவே இந்த திருமண கடலுக்குள் ஆழம் பார்ப்பது கொஞ்சம் பயமான காரியம்தான். ஆனாலும் அதனையும் உடன் இருப்பவர்கள் உந்துதலால் நல்லபடியாக செய்து முடித்தவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை.

திருமணம் என்பது ஒரு பொறுப்பு

7அடி மனைவி காலை பிடித்து எடுத்து வைத்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னியை வலம் வந்து உங்கள் திருமணம் முடிந்திருக்கும். முதல் சண்டை முடிந்து உங்கள் உடைகளை பேக் செய்து அம்மா வீட்டிற்கும் போய் வந்திருக்கலாம். அதெல்லாம் போகட்டும். சண்டை இல்லாத சமாதானமான திருமண வாழ்க்கை வேண்டாம் என்று யாரவது கூற முடியுமா. அதற்காகதான் இந்த கட்டுரை.

கருத்து வேறுபாடுகள்

இது பொதுவாக எல்லா உறவுகளுக்கு இடையில் நடக்கிற ஒன்றுதான் என்றாலும் நாம் முழு உரிமை செலுத்தக் கூடிய ஒரு உறவில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் வரும்போது அதனை எல்லோராலும் ஏற்று கொள்ள முடிவதில்லை.

எங்க வீட்ல முக்கியமான முடிவுகளை நான் எடுப்பேன் சின்ன முடிவுகளை மனைவிகிட்ட விட்டுடுவேன் என்கிறார் ஒருவர். அப்படியா என்னென்ன முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள் என்று ஆச்சர்யத்தில் இன்னொருவர் கேட்க நாட்டை எந்த கட்சி ஆள வேண்டும் கிரிக்கெட்டில் யார் ஜெயிக்க வேண்டும் என்பது போன்ற பெரிய முடிவுகளை நான் எடுப்பேன்.

வீட்டுக்கு என்ன வாங்க வேண்டும் சொந்தக்காரர் கல்யாணத்துக்கு என்ன சீர் செய்ய வேண்டும் என்பது போன்ற சின்ன முடிவுகளை என் மனைவி எடுப்பார் என்றாராம் அவர். இப்படித்தான் பலரின் வாழ்க்கை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கருத்து வேறுபாடுகள் உங்கள் வாழ்வை மாற்றி விடாமல் பார்த்து கொள்ளுங்கள். அவரவருக்கென தனி கருத்து எல்லாவற்றிலும் இருக்கும் என்பதை பரஸ்பரம் ஒப்புக்கொண்டு குடும்பத்தை கொண்டு செலுத்துங்கள்.

சகிப்பு தன்மை குறையலாம்

இப்போதெல்லாம் முணுக் என்றாலும் நீதிமன்ற வளாகத்திற்கு நுழையும் பெண்கள் ஆண்கள் என பலரை பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளும் தன்மை மிக குறைந்து போனதே இதற்கு காரணம். குறட்டை விடுவது ஒரு குறைபாடு அதனை கூட பொறுத்து கொள்ளாமல் நீதிமன்றம் ஏறும் தாய்குலங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தன்னை போலவே அவளும் தனக்கு துரோகம் செய்து விடுவாளோ என்று சந்தேகத்தில் நடுங்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை தவிர்ப்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிகோலும்.

நம்பிக்கைகள் அதற்கான மதிப்புகள்

கணவன் மனைவி இருவரும் ஒருவர் உயிர் இன்னொருவரில் கலந்த அன்றில் பறவைகள் என்றாலும் கூட இருவருக்கும் இடையே தனிப்பட்ட நம்பிக்கைகள் பல இருக்கலாம். உதாரணமாக கலப்பு திருமணம் நடக்கும் தம்பதிகளில் ஒரு சிலர் தாங்கள் வழிநடத்தப்பட்ட நம்பிக்கைகளை விட்டு கொடுக்க முடியாமல் புதிய உறவால் ஏற்பட்ட நம்பிக்கைகளை ஏற்க முடியாமல் போலித்தனமாக இருப்பார்கள்.

தான் மட்டுமே கோயிலுக்கு செல்வது ஒருவருக்கு சலிப்பை தரலாம். துணை கடவுள் நம்பிக்கை அற்றவராக இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தலாம். மென்று முழுங்கித்தான் வாழ்வு நடக்குமே தவிர நிம்மதியாக இருக்காது. குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதிலும் பிரச்னைகள் வரலாம். இது உங்கள் திருமண பந்தத்தை கேள்விக்குறி ஆக்கலாம்.

அழுத்தம்

அழுத்தம் என்பது எல்லா உறவுகளும் சந்திக்கும் ஒரு சகஜமான அத்யாயம்தான். அப்பா அம்மா முதல் மகன் மகள் வரை எல்லா உறவுகளிலும் சில நேரங்கள் ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தங்கள் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் இதில் முதன்மையானவை.

அதன் பின்னர் குடும்ப சிக்கல்கள் அம்மா மனைவிக்கிடையே ஆன போராட்டங்கள் பிள்ளைகள் தரும் தொல்லைகள் என இதன் நீட்சி அதிகமாகவே இருக்கும். ஸ்ட்ரெஸ் என்பதை எது வேண்டுமானாலும் தொடங்கலாம். இதுவும் உங்கள் திருமண உறவை பதம் பார்க்கும்.

உறவுகளில் ஏற்படும் சலிப்புகள்

சலிப்பு திருமண உறவை உடைக்க கூடிய மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு காரணம் என்றாலும் கூட இது மிக கவனமாக கையாள வேண்டிய காரணமாகும். பழகி போன வழக்கங்கள் பெரும்பாலும் சலிப்பை பிரிவு வரை இழுத்து செல்வதில்லை என்றாலும் பழக்கப்படுத்தப்பட்ட அதாவது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில பழக்கங்கள் உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

இருவருக்கிடையே ஒரு ஸ்பார்க் இல்லாத போது தொடர்ந்து பல வருடங்கள் ஒரே வித வழக்கங்களை செய்து கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்தும்.

ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது

உணர்வு ரீதியாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்வது இன்னொரு உறவினை ஏற்படுத்தி கொண்டு உங்கள் துணைக்கு துரோகம் செய்வது என்பது சரி செய்ய முடியாத சிக்கல்களை உருவாக்கலாம்.

இதனை தவிர ஒரு நாள் இரவுக்கு பழகும் பார்ட்டி உறவுகள், உடல்ரீதியான மாற்று தேவைகளுக்காக செய்யப்படும் துரோகங்கள், இணையவழி உறவுகளால் ஏற்படும் சலனங்கள், குறைந்த கால உறவுகள் என இதற்கான பெயர்கள் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் இதன் பெயர் துரோகம் என்பதே ஆகும்.

முதலில் குறிப்பிட வேண்டிய காரணத்தை இறுதியாக குறிப்பிட்டிருப்பது இதனை அடுத்தடுத்த காரணங்களால் நீங்கள் மறந்து விட வேண்டாம் என்பதனால் தான்.

ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருங்கள்

என்ன நடந்தாலும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுங்கள். மறைக்காதீர்கள். அதனை பற்றி கேள்வி கேட்க வரும் துணையை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளாமல் அமைதியாக பேசுங்கள். உங்கள் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் உங்கள் துணை மீதான அவதூறுகளை பேசாமல் உங்கள் தவறுகளை ஏற்று கொண்டு அதற்கு அடுத்த கட்டத்தை பற்றி யோசியுங்கள். உங்கள் தவறுகளை சரி செய்யுங்கள்.

பாராட்டுங்கள்

ஒருவரை ஒருவர் பாராட்டுவது வலிமையான உறவுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையை உங்கள் கால்களுக்கு கீழே வைத்து கொள்ளாமல் உங்கள் தோள்களில் சாய்த்து கொள்வதுதான் அற்புதமான உறவின் அழகான அடையாளம் என்பதை உணருங்கள்.

அடுத்தவரின் திறமைகளை பாராட்டுங்கள். உங்களின் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதை விடவும் இது மிகவும் அற்புதமான பலன்களை தரும்.

முக்கியத்துவம்

என்ன ஆனாலும் உங்களோடு வாழ்நாள் முழுதும் வர போகும் உறவிற்கு முதன்மையான இடம் தருவதுதான் நியாயம்? இறைவனே தனது பாதியை உமையாளுக்கு கொடுத்து இதற்கான முன்னுதாரணமாக திகழ்கையில் நாம் மனிதர்கள் ஏனோ இதனை செய்ய தயங்குகிறோம்.

நம்மோடு கூட இருப்பவர்தானே என்கிற அலட்சியம் பெரும்பாலும் வெல்வதால் இந்த நிலை. முதலில் உங்களில் பாதியானவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்வில் நல்லவை எல்லாமே முதன்மையாக உங்களுக்கு நடக்கும்.

வார இறுதிகளில் டேட்டிங்

திருமணமான துணையோடு டேட்டிங்கா அதுவும் பிள்ளைகள் பிறந்த பிறகா என்று நீங்கள் கொஞ்சமாக வெட்கப்படலாம். பரவாயில்லை நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகளும் வெளியே வரட்டும்.

நிச்சயம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே அந்த காதல் பொறி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது அணைகின்ற சமயத்தில்தான் அடுத்த உறவுகள் முளைக்கின்றன. அதனை வரவேற்காமல் இருக்க நீங்கள் வார இறுதிகளில் ஒரு இரவை உங்கள் இவருக்காக ஒதுக்கி டேட் செல்லுங்கள்.

சமாதானம்

எவ்வளவு சண்டை நடந்தாலும் முதல் மூன்று நாட்களுக்குள் சமாதானம் செய்து கொள்வதாக உங்களுக்குள் சபதம் செய்து கொள்ளுங்கள். நமது ஈகோவா அல்லது நமது வாழ்நாள் துணையா என்று வரும்போதெல்லாம் நீங்கள் ஈகோவை துறப்பது உங்கள் காதலை காப்பாற்றும்.

உங்கள் துணைக்கான தனிப்பட்ட இடத்தை நீங்கள் அனுமதியுங்கள்

ஈருடல் ஓருயிர் என்றாலும் உங்கள் இருவரின் உயிரும் தனித்துவமானவை என்பதை உணர்ந்து உங்கள் துணைக்கு தேவையான தனிமையை கொடுங்கள். அவர் புத்தகம் படிக்கட்டும் வெளியே சென்று வரட்டும் பிடித்த படங்களை பார்க்கட்டும் எல்லாமே உங்கள் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று நினைக்காமல் அவரது விருப்பங்களை அனுமதியுங்கள்.

உங்கள் இருவரின் குடும்ப உறவுகளை மதியுங்கள்

உலகில் பெரும்பான்மையான மக்கள் பின்படுத்துவது பெண்களின் உறவுகளை மதிப்பதும் ஆண்களின் உறவுகளை தவிர்ப்பதும் போன்ற வழக்கங்களையே. ஆச்சர்யகரமாக இது உலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் பல்வேறு நாடுகளில் பல விவாகரத்துகள் சாத்யமாகின்றன. இதனை தவிர்க்க இரண்டு பக்க உறவுகளையும் சமமாக நீங்கள் நடத்த வேண்டும் என்பதுதான்.

திட்டமிடுங்கள்

என்ன திட்டமாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து அதனை திட்டமிடுங்கள். ஒரு ஞாயிறு திரைப்படமோ அல்லது குடும்பத்துடன் ஆன சுற்றுலாவோ இருவரும் இணைந்து திட்டமிடுங்கள். இது உங்களுக்கிடையேயான உறவினை பலப்படுத்தும்.

எப்போதெல்லாம் முடியுமோ

எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒன்றாகவே இருங்கள். ஒன்றாகவே செல்லுங்கள்.உங்களை நம்பிய உறவான திருமணத்தில் ஒருவரை ஒருவர் கைபிடித்து அழைத்து செல்வதில்தான் வாழ்க்கையின் அற்புதம் அடங்கி இருக்கிறது.

வேண்டும் சில விளையாட்டுத்தனங்கள்

உங்கள் துணையை மன அழுத்தங்கள் நீங்கி வாய் விட்டு சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுக்களை செய்யுங்கள். ஜோக் அடியுங்கள். உங்கள் துணை மனம் விட்டு சிரித்தபடி மகிழ்வாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக நடக்கும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x