அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

0

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் இன்று (27) முற்பகல் 11 மணி மரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அன்னாரின் பூதவுடல் நாளை (28) நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

அதனையடுத்து, இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஜனாதிபதி பதிவொன்றை இட்டுள்ளதுடன், அதில், “அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உறுதியாக நின்றவர் என” இரங்கல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தாம் ஒன்றாக அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டியதுடன் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு தன்னை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இரங்கல் வௌியிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு தலைவராக தனது மக்களுக்கு நியாயமாக பணியாற்றியவர் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரங்கல் வௌியிட்டுள்ளார்.

அவரது இழப்பு நாட்டின் சமூகங்களில் தாக்கத்தை செலுத்தும் எனவும் ரணில் விக்ரமசிங்க பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது மலையக மக்களுக்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களுக்கும் ஒரு பாரிய இழப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுதாபம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் பேரிழப்பாகும் என தமிழர் விடுதலை கூட்டணி அனுதாபம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஆறுமுகன் தொண்டமனை நேற்று மாலை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவை நம்ப முடியவில்லை என இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பால்பட்ட நண்பரும் கட்சித் தலைவர் சகாவுமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இரங்கல் வௌியிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு என முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னும் பலர் தமது அனுதாபங்களையும், இரங்கல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x