ஆஸ்திரேலிய ஒருநாள் அணித்தலைவராக பாட் கம்மின்ஸ் நியமனம்!

29 வயதான பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணித்தலைவராக பாட் கம்மின்ஸ் நியமனம்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், 29 வயதான பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அவர் கடந்த 2021 நவம்பர் வாக்கில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அணியின் டெஸ்ட் செயல்படும் அருமையாக உள்ளது. 

இதனையடுத்து அவருக்கு தற்போது ஒருநாள் அணியையும் வழிநடத்தும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர் முதல் பாட் கம்மின்ஸ் கேப்டனாக இயங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான பாட் கம்மின்ஸ், இதுவரை 43 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் போன்ற ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இப்போது கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியை வழிநடத்தும் 27ஆவது கேப்டன் எனும் பெருமையையும் பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.