ஐ.பி.எல்: சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

ஐ.பி.எல்: சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன. 

தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் வைடு, நோ-பால் தாறுமாறாக வீசியதால் எரிச்சலடைந்த கேப்டன் டோனி கடுமையாக கண்டித்தார். 

இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துவீசுவார்கள் என்று நம்பலாம். வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும். 

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் 'சரண்' அடைந்தது. அந்த ஆட்டத்தில் 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி அதன் பிறகு திலக் வர்மாவின் (84 ரன்) அரைசதத்தால் 170-ஐ தாண்டியது. ஆனாலும் அந்த இலக்கை பெங்களூரு 16.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. 

இப்போது உள்ளூரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் மும்பை களம் இறங்குகிறது. உள்ளூர் சூழல் நிச்சயம் அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். 

மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் நேற்று அளித்த பேட்டியில், 'பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தொடக்கம் கண்டாலும் அதன் பிறகு சமாளித்து ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டினோம். இப்போது வான்கடேவுக்கு திரும்பி இருப்பதால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

அணியில் ஓரிருவர் மட்டுமல்ல, அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்ற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவரது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதை களத்தில் நிரூபித்து காட்டுவார்' என்றார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். ரசிகர்களின் ஆர்வமும் எகிறும். இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. 

இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத் தான் அதிகமாக தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதே போல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

அவர்களின் ஆதிக்கத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஆடுகளத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் எடுபடலாம். எப்படி என்றாலும் ரன்வேட்டைக்கு உகந்த வகையிலேயே ஆடுகளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- 

சென்னை: டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்,மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), சிசாண்டா மகாலா அல்லது மிட்செல் சான்ட்னெர், ஹேங்கர்கேகர், தீபக் சாஹர். 

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான், பியுஷ் சாவ்லா அல்லது குமார் கார்த்திகேயா, ஜோப்ரா ஆர்ச்சர். 

டெல்லி- ராஜஸ்தான் மோதல் முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை கவுகாத்தியில் எதிர்கொள்கிறது. 

தொடர்ந்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) தனது திருமணத்துக்காக தாயகம் திரும்பியுள்ளதால் சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை. 

இதே போல் ராஜஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் விரலில் காயமடைந்த ஜோஸ் பட்லர் களம் காணுவது சந்தேகம் தான். ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமாவில் நேரடியாக பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW