ரஷ்யாவுக்கு எதிராக சீனா எடுத்த முடிவு.. ஷாக்கான புதின்..!

இதன் மூலம் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எவ்விதமான கடன் மற்றும் உதவிகளை அளிக்க முடியாது.

ரஷ்யாவுக்கு எதிராக சீனா எடுத்த முடிவு.. ஷாக்கான புதின்..!

உக்ரைன் போர் தொடுத்த காரணத்திற்காக உலகில் பல நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு தடையை விதித்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் நட்பு நாடு எனக் கூறப்பட்டு வரும் சீனா ஆதிக்கம் செலுத்தும் ஒரு முக்கியமான அமைப்பு ரஷ்யா மீது புதிய தடையை விதித்துள்ளதால் ரஷ்ய அதிபரான விளாடிமீர் புதின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா சர்வதேச சந்தையில் இருந்து மொத்தமாக ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஏசியன் இன்பராஸ்டக்சர் இண்வெஸ்ட்மென்ட் பேங்க் (AIIB) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் தொடர்பான அனைத்து AIIB-யின் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மறுபரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏசியன் இன்பராஸ்டக்சர் இண்வெஸ்ட்மென்ட் பேங்க் நிர்வாகம் இந்த முடிவை வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி நிலைமையின் பின்னணியில் AIIB இன் நிதி ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எவ்விதமான கடன் மற்றும் உதவிகளை அளிக்க முடியாது.

ஏசியன் இன்பராஸ்டக்சர் இண்வெஸ்ட்மென்ட் பேங்க்-ல் சீனா 26.5 சதவீத பங்குகளைக் கொண்டு இருக்கும் காரணத்தால், இவ்வங்கி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் அதிகப்படியான வாக்கு உரிமை உள்ளது. ஆனாலும் இந்தத் தடைக்குச் சீன ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஏசியன் இன்பராஸ்டக்சர் இண்வெஸ்ட்மென்ட் பேங்க் (AIIB) என்பது ஆசியாவின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைப்பாகும். இவ்வங்கியில் தற்போது 105 உறுப்பினர்கள் உள்ளனர், புதிதாக 16 நாடுகள் வருங்கால உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட உள்ளனர்.

உலக வங்கி மற்றும் IMF க்குப் போட்டியாக ஒரு அமைப்பை ஆசிய சந்தைக்காக உருவாக்க வேண்டும் என்பதற்காக 2013ஆம் ஆண்டில் ஏசியன் இன்பராஸ்டக்சர் இண்வெஸ்ட்மென்ட் பேங்க் என்ற அமைப்புக்கு சீனா முன்மொழிந்தது. அதன் பின் 2014 அக்டோபரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 2015 முதல் இயங்கி வருகிறது.