கோலியுடன் வலை பயிற்சியில் ஈடுபட்ட பாபர், ரிஸ்வான்!

ஐசிசியின் எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

கோலியுடன் வலை பயிற்சியில் ஈடுபட்ட பாபர், ரிஸ்வான்!

ஐசிசியின் எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

இத்தொடரின் முதல் சுற்றில், ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும், இருமுறை உலகச்சாம்பியனான வெஸ்ட் இண்டீசை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 

இதனால் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் என்ன திருப்பம் நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. 

அதில் வெற்றி பெறுவதற்காக அந்த 2 அணிகளும் அக்டோபர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கின. 

காபா மைதானத்தில் நடைபெற்ற அந்த பயிற்சி கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டிக்குப் பின் அதே மைதானத்தில் அடுத்ததாக இங்கிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. 

தங்கள் அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்ப்பதற்காக அப்போட்டியில் பாபர் அசாம் – முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்காத நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்தன.

இந்நிலையில், போட்டி முடிந்து எஞ்சிய இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குத் திரும்பிய நிலையில் தன்னுடைய பேட்டிங்கில் திருப்தியடையாத விராட் கோலி தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். 

கடந்த 2019ஆம் ஆண்டுக்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த போது இதே போல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களை தகர்த்தெரிந்தார். 

அதே பார்மை இந்த முக்கியமான உலக கோப்பையில் தொடர விரும்புவதால் இப்படி தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதே மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், விராட் கோலி பயிற்சி எடுத்த பக்கத்து வலையிலேயே தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றதால் அவரும் முஹம்மது ரிஸ்வானும் அடித்தால் மட்டுமே பாகிஸ்தான் வெல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இருவருமே விராட் கோலிக்கு அருகே தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.