தசுன் ஷானகவின் அதிரடியால் இலங்கை திரில் வெற்றி

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், துடுப்பாட்ட வீரர்கள் சமபலமான பங்களிப்புகளை வழங்க சிறந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கி நகர்ந்தது.

தசுன் ஷானகவின் அதிரடியால் இலங்கை திரில் வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் தசுன் ஷானகவின் அற்புதமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

தொடரை 2-0 என ஏற்கனவே இழந்திருந்த இலங்கை அணி இன்றைய தினம், கண்டி-பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியது.

வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரவுக்கு பதிலாக பிரவீன் ஜயவிக்ரம அணியில் இணைக்கப்பட, அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் மார்ஷிற்கு பதிலாக ஜோஸ் இங்லிஸ் இணைக்கப்பட்டார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், துடுப்பாட்ட வீரர்கள் சமபலமான பங்களிப்புகளை வழங்க சிறந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கி நகர்ந்தது.

பவர்-பிளே ஓவர்களில் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் வேகமான ஓட்டக்குவிப்புடன் ஆட்டத்தை ஆரம்பிக்க, மத்திய ஓவர்களில் ஸ்டீவ் ஸ்மித் அணியின் ஓட்டக்குவிப்பை நிதானமான நகர்த்தினார். இவருடன் ஜோடிசேர்ந்த மார்கஸ் ஸ்டொயினிஸ் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

டேவிட் வோர்னர் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மார்கஸ் ஸ்டொயினிஸ் 23 பந்துகளில் 38 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 176/5 ஆக உயர்த்தினர். இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் உதவியுடன் நிதானமான ஆரம்பம் கிடைக்க, குணதிலக்கவின் ஆட்டமிழப்பின் பின்னர் சரித் அசலங்க ஓட்டக்குவிப்பை வேகமாக்கினார்.

சரித் அசலங்க 19 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, பெதும் நிஸ்ஸங்க 27 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பானுக ராஜபக்ஷ வேகமாக 17 ஓட்டங்களை பெற்ற போதும், துரதிஷ்டவசமான முறையில் விக்கெட்டினை பறிகொடுத்தார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்க இலங்கை அணியின் மத்தியவரிசை மீண்டுமொருமுறை தடுமாற்றம் கண்டது.

எனினும், நிதானமான ஆட்டத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அணித்தலைவர் தசுன் ஷானக, இலங்கை கிரிக்கெட்டுக்கான அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடியிருந்தார். ஒருகட்டத்தில் 12 பந்துகளுக்கு 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த ஷானக ஜோஷ் ஹெஷல்வூட் வீசிய  18வது ஓவரில் 22 ஓட்டங்களை விளாசி போட்டியை சூடுபிடிக்க வைத்தார்.

மறுமுனையில் சாமிக்க கருணாரத்ன பங்களிப்பு வழங்க, 19வது ஓவரை வீசிய ஜெய் ரிச்சட்சின் ஓவரில் 19 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளும் வைட் பந்துகளாக வீசப்பட்ட நிலையில்,  கடைசி 4 பந்துகளில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எனினும் தசுன் ஷானக இரண்டு பௌண்டரிகள் மற்றும்  சிக்ஸரை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார்.

தசுன் ஷானக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை விளாசியதுடன், சாமிக்க கருணாரத்ன 14 ஓட்டங்களை பெற்றார். எனவே, இந்தப்போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி வெற்றியிலக்கை 20 ஓவர்களில் அடைந்தது.

இலங்கை அணி இந்தப்போட்டியில் திரில் வெற்றியை பதிவுசெய்திருந்த போதும், அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது. இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.