ஒரே நாளில் 2 திருமணம் செய்த சிவாஜி : பிளாஷ்பேக்

ரஜினி,கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகர்ளுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். 

ஒரே நாளில் 2 திருமணம் செய்த சிவாஜி : பிளாஷ்பேக்

தமிழ் சினிமாவின் நடிப்பு திலகம் என்று பெயரெடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சிவாஜி பிளாக் அண்டை ஒயிட் படங்கள் தொடங்கி இன்றைய டிஜிட்டல் சினிமா வரை பல படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.

மேலும், ரஜினி,கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகர்ளுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். 

நடிப்பில் அவரது நடை உடை பாவனை என பல அசைவுகளை இன்றைய நடிகர்கள் பலரும் தங்களது நடிப்பில் சேர்த்துக்கொள்கின்றனர் என்றே சொல்லலாம்.

இப்படி நடிப்பில் தனி முத்திரை பதித்த சிவாஜி கணேசனுடன் 60 படங்களில் இணைந்து நடித்துள்ள நாயகி நடிகை பத்மினி. ஒரு நடிகர் ஒரு நடிகையுடன் 60 படங்களில் இணைந்து நடித்துள்ளது உலகளவில் பெரிய சாதனை என்று சிவாஜியுடனான சந்திப்பில் பத்மினியே தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் முதல் முறையாக 1952-ம் ஆண்டு வெளியான சிவாஜியின் 2-வது படமான பணம் படத்தின் மூலம் தொடங்கிய இந்த ஜோடி, அன்பு, இல்லற ஜோதி, கல்யாணம் பண்ணியம் பிரம்மச்சாரி, தில்லான மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பத்மினி தனது திரைத்துறை வாழக்கை குறித்து பல நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார். அதில், சிவாஜி குறித்து கேட்டபோது, அவரும் நானும் 60 படங்களில் இணைந்து நடித்துள்ளோம்.

இதில் 1952-ம் ஆண்டு வெளியான பணம் படத்தில் தான் நாங்கள் முதல் முதலாக இணைந்து நடித்தோம். இந்த படத்தை என்.எஸ் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். கவிஞர் கண்ணதாசன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் முதல் காட்சியில் எனக்கும் சிவாஜி அவர்களுக்கும் திருமணம் ஆகும் காட்சி படமாக்கப்பட்டது. திருமணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு வரவேண்டும்.

எனது மாமனார் சிவாஜி அவர்களின் தந்தையாக கே.ஏ.தங்கவேலு நடித்திருந்தார். இந்த படத்தில் எங்களது திருணம் தொடர்பான காட்சி படமாக்கப்பட்ட அன்று சிவாஜி அவர்களுக்கு கமலா அவர்களுக்கும் ரியல் திருமணம் சாமிமலையில் நடந்து. இந்த நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.