காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம் : Kaathuvaakula Rendu Kaadhal Review
Kaathuvaakula Rendu Kaadhal Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

நடிகர்கள்: விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா
இசை: அனிருத்
இயக்கம்: விக்னேஷ் சிவன்
நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இந்த படத்தில் கூடுதலாக நடிகை சமந்தாவும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், கண்மணி, கதீஜா இருவருமே ராம்போ விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லை விக்னேஷ் சிவன் என்ன மேஜிக் செய்துள்ளார் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
அதிர்ஷ்டமில்லாத ராம்போ
ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஒரு சாக்கோ பார் ஐஸ் க்ரீம் கூட அவர் எதிர்பார்க்கும் போது கிடைக்காத அளவுக்கு அதிர்ஷ்டமில்லாதவராக அந்த கதாபாத்திரத்தை விக்னேஷ் சிவன் உருவாக்கி உள்ளார். பிறந்த உடனே அப்பா இறந்து விடுகிறார். அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவை பார்க்க போனால், அவரது உடல் மேலும், மோசம் அடைவதாக நர்ஸ்களே சொல்லிவிடுவதால், அம்மாவை பார்ப்பதையே விட்டு விடுகிறார். மழை பெய்யும் போது, இவர் வெளியே போனால், அந்த மழை கூட நின்று விடுகிறது.
டபுளா கிடைச்சா
இப்படி எதுவுமே கிடைக்காமல் இருக்கும் விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் எல்லாமே டபுளா கிடைச்சா எப்படி இருக்கும்? என கதை எழுதிய இடத்திலேயே விக்னேஷ் சிவன் கைதட்டல்களை அள்ளுகிறார். அதனால் தான் அப்படி ஐ லவ் யூ டூங்க என விஜய்சேதுபதி சமந்தாவையும், நயன்தாராவையும் காதலிக்கிறார் என்பதற்கு கதைப்படி லாஜிக்கை அமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
கண்மணிக்கு கடன் பிரச்சனை
கண்மணி கங்குலி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா பாலிவுட் படத்திற்காக ஓடாய் தேய்ந்து கீர்த்தி சுரேஷை போலவே பார்க்கவே பாவமாக இருக்கிறார். ஸ்பெஷல் சைல்ட் தம்பி மற்றும் ஒரு தங்கையை வளர்க்கும் அவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கு.. காலையில் ஓலா டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கும் விஜய்சேதுபதி உடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் சொல்வதை போலவே, என்னை யாராச்சும் பெரிய ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொல்லை பண்ணும் கடன்காரங்களை துரத்த கேட்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
காதல் செட்டாகாத கதீஜா
காலையில் கால் டாக்ஸி டிரைவராகவும் இரவில் பார் ஒன்றில் ஜிம் பாயாகவும் பணியாற்றி வருகிறார் விஜய்சேதுபதி. பாருக்கு தனது பாய் ஃபிரண்ட் ஸ்ரீசாந்த் உடன் வரும் சமந்தாவுக்கு காதல் செட் ஆகவில்லை. "பேபி.. பேபி.. என சுற்றித் திரியும் ஸ்ரீசாந்தை விட Maybe.. Maybe.." என எதார்த்தமாக பேசும் ராம்போ மீது கதீஜாவுக்கு காதல் உண்டாகிறது.
டிவி ஷோ
பழசையெல்லாம் மறந்து விட்டார் விஜய்சேதுபதி என ஒரு பொய்யை சொல்லி ஒரு பொய்யான ஷோவை இளைய திலகம் பிரபு டிவியில் விஜய்சேதுபதிக்காக நடத்துகிறார். கண்மணியா? கதீஜாவா? இருவரில் யாரை காதலிக்கிற என கேட்க, அப்போது தான் ஐ லவ்யூ டூ என்றும் இவங்க ரெண்டு பேரும் வந்த உடனே தான் எனக்கு என் வாழ்வில் நல்லதெல்லாம் நடக்குது.. இருவருமே எனக்கு புடிச்சிருக்கு.. ரெண்டு பேரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொல்ல நயன்தாராவும் சமந்தாவும் என்ன முடிவை எடுக்கிறாங்க படத்தின் கிளைமேக்ஸ் எப்படி முடிகிறது என்பது தான் செம ட்விஸ்ட்.
பிளஸ்
அனிருத் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பிரமாதம். விக்னேஷ் சிவன் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கெட்டு எழுதியிருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. பல இடங்களில் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகிறது. அதை விட உணர்ச்சிகரமான தருணங்கள் அந்த ஃபீலை நல்லாவே கொடுக்கிறது. நயன்தாரா, விஜய்சேதுபதியை விட சமந்தா காஸ்டிங் தான் இந்த படத்திற்கு பெரிய பலம்.
மைனஸ்
ஊர்ல விஜய்சேதுபதியை விட்டா வேறு பையனே கிடைக்காத மாதிரி, இரு ஹீரோயின்களும் அவரை அடைய போடும் போட்டி சினிமாவுக்கு நல்லா இருந்தாலும், பல இடங்களில் ஆடியன்ஸை நெளிய வைக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில் இருந்த நயன்தாராவின் புசுபுசு தோற்றம் மிஸ் ஆனது படத்திற்கு நிச்சயம் பெரிய மைனஸ் ஆகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும், அதை தனது நடிப்பால் மேனேஜ் செய்து விடுகிறார் நயன்தாரா. ரஜினிகாந்தின் வீரா படத்தை எல்லாம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் ரொம்பவே நல்லா இருக்கும். நிச்சயம் தியேட்டரில் சென்று படத்தை ஜாலியா பார்க்கலாம்.