உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது...

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

அத்துடன், உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. 

எனினும் பொலிஸாரின் உதவியுடன் அதனை முகாமைத்துவம் செய்ய முடிந்தது. இதேபோன்று பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளின் உதவியும் கிடைக்கப்பெற்றது.

தற்போது பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 7 பாடசாலைகள் மாத்திரம் மூடப்பட்டிருக்கும்.

அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கேகாலை வித்தியாலயம், கண்டி - கிங்ஸ்வூட் வித்தியாலயம், கண்டி - சீதாதேவி பெண்கள் பாடசாலை, காலி - வித்தியாலோக மகா வித்தியாலயம், பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

அதே போன்று புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 

அதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்பரீட்சைகள் ஆணையாளர்