கோடிகளில் கொட்டும் இந்தியாவின் உதவிகள்

கோடிகளில் கொட்டும்  இந்தியாவின் உதவிகள்

பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமன்ற தன்மை என்பவற்றால் இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைமையை எதிர்கொண்டுள்ளது. இன்று காணப்படுகின்ற இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் வாய்ப்புக்களும் ஏராளமாக உள்ளன.

அத்துடன், உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளன. கடந்த வாரமும் கோதுமை மாவின் விலை 40 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, பாணின் விலை 30 ரூபாய் அதிகரித்து 170 ரூபாயைவிட எகிறியுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கை தன்னை காத்துக்கொள்ள பல்வேறு நாடுகளுடன் உதவிக் கோரியுள்ளது. புதிய பிரதமாராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற உடனேயே, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களை சந்தித்து உதவி கேட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்திய மக்களின் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் இலங்கையை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்திருந்தது.  

இவ்வாறான ஒரு நிலையில், இந்திய மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாயக்கும் அதிக பெறுமதியானதுமான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட்கள் தொகுதியை இந்திய உயர் ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கடந்த 22ஆம் திகதி கொழும்பில் கையளித்தார். 

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான்,  பிரதமரின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர். 

9000 மெட்ரிக்தொன்  அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா  மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. மே 18ஆம் திகதி தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்திருந்தார். 

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. 

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும். 

அத்துடன் இன்னும் பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன. 

3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன்  திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவிகளால் இலங்கைக்கு டொலர் கடனாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வந்த இலங்கை ரூபாயின் பெறுமதி, பிரதமராக ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் அடுத்த நாள், அதிகரித்திருந்தது. 365 ரூபாயாக ஓர் இரவிலேயே டொலர் வீழ்ச்சி அடைந்தது . பங்கு சந்தை ஒரு வளர்ச்சியை எட்டியிருந்தது.  தொடர்ந்து தனிநபர் ஒருவர் 10000 டொலரை மாத்திரமே வைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டடிருந்த 15000 டொலரில் இருந்து 10000 டொலர் வரை அந்தத் தொகை குறைக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரசிங்க பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் கூறியிருந்தார்.  கடந்த காலங்களிலும் அவர் உரையாற்றும் போது, இந்த அபாய எச்சரிக்கையை தொடர்ச்சியாக விட்டிருந்தார். ஆனால், அவரை எல்லோரும் அப்போது நகைச்சுவையாக  பார்த்தார்கள்.

இப்போதும் கூட அவருடைய பொருளாதார ரீதியான கணிப்பீடுகள் பெரும்பாலும் சரியாக உள்ளதுடன், சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. ரஷ்யா - யுக்ரேன் யுத்தம் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. கேதுமை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

இப்போது உள்ள சூழ்நிலையிலே உள்நாட்டிலே உற்பத்தியை பெருக்குவதற்குரிய வழி வகைகளை முக்கியமாக செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. யுரியா இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. அந்த உரம் முறையாக கிராமிய மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படுகின்ற பட்சத்திலே ஓரளவுக்கேனும் உணவு தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை தவிர்த்துக்கொள்ள முடியும். 

பொதுமக்கள் தமது காணிகளிலே ஏதாவது ஒரு பயிர் செய்கையை செய்ய முயற்சிக்க வேண்டும். இதன் ஊடாகத்தான் உணவு நெருக்கடியிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அதேநேரம், இந்தியாவிடம் இருந்து நாட்டை வந்தடைந்துள்ள மனிதாபிமான உதவிப் பொருட்கள் இன, மத, மொழி மற்றும் கட்சி பேதங்களின் தலையீடு இன்று பாதிக்கப்பட்ட மக்களின் கரங்களுக்கு சென்றடைய வேண்டும். அதுதான் தமிழக மக்கள், இலங்கை மக்களின் மீது வைத்துள்ள அன்புக்கு செய்யும் கைமாறாக இருக்கும்.