Thu, Oct21, 2021
Homeசினிமாரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர்.... நடிகை குஷ்பு கடந்து வந்த பாதை

ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர்…. நடிகை குஷ்பு கடந்து வந்த பாதை

சினிமாவில் முன்னணி நடிகையாக வெற்றிகண்ட குஷ்பு, தற்போது அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்று 51-வது பிறந்தநாளை கொண்டாடும் அவர், கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

சினிமா

1970-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் திகதி மும்பையில் பிறந்தார் குஷ்பு. இவரது இயற்பெயர் நகர்த் கான். 1980-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் குஷ்பு. பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், அவருக்கு புகழை தேடித் தந்தது, தமிழில் பிரபு ஜோடியாக 1988-ம் ஆண்டு அவர் நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படம் தான்.

குஷ்பு

இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, நாட்டாமை, அண்ணாமலை, பெரியார், மன்னன், சிங்காரவேலன் என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் குஷ்பு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள குஷ்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அளவில் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால், அது குஷ்புவிற்கு மட்டும் தான். அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

காதல் திருமணம்

முறைமாமன் படத்தில் நடித்தபோது இயக்குனர் சுந்தர்.சி மீது காதல் வயப்பட்ட குஷ்பு. கடந்த 2000-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குஷ்பு

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட குஷ்பு. அவ்னி சினிமேக்ஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி கிரி, ரெண்டு, கலகலப்பு, அரண்மனை 2, மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படங்களை தயாரித்தார். இதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள அவர், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

அரசியல்

கடந்த 2010-ம் ஆண்டு அரசியலில் குதித்த குஷ்பு, கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இருந்தபோது கடந்த 2014-ம் ஆண்டு திமுக-வில் இருந்து விலகினார் குஷ்பு.

இதையடுத்து 2014-ம் ஆண்டு சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் சேர்ந்த குஷ்பு, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ரீ-என்ட்ரி

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் பிசியாக இயங்கி வரும் குஷ்பு, தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். அதன்படி சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் குஷ்பு.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள குஷ்பு, இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இப்படி நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே செல்லும் நடிகை குஷ்பு, இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகை குஷ்புவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க