Tue, Aug3, 2021
Homeஇந்தியாதடுப்பூசியின் பக்க விளைவால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு

தடுப்பூசியின் பக்க விளைவால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்க விளவாக ஒருவர் மரணம் அடைந்திருப்பது முதன் முதலாக அரசு குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு கோவோக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தோன்றிய ஒரே ஆண்டில் உருவாக்கி போடப்படுகிற இந்த தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய அளவில் மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரண மதிப்பீட்டு குழு (என்.ஏ.இ.எப்.ஐ.) அமைக்கப்பட்டது.

இந்த குழு 31 மோசமான பாதகமான நிகழ்வுகளின் காரணத்தை மதிப்பீடு செய்து வந்தது. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 8-ந் திகதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயதான முதியவர் ஒருவர் ‘அனாபிலாக்சிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் இறந்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்த குழுவின் தலைவரான டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், “கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (பக்க விளைவு) தொடர்புடைய முதல் மரணம் இதுவாகும்.

இது தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்கள் அந்த மையத்தில் காத்திருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. பெரும்பாலான ஒவ்வாமை எதிர்வினைகள் இந்த நேரத்தில்தான் நிகழ்கின்றன. உடனடி சிகிச்சை, மரணத்தை தடுக்கிறது” என தெரிவித்தார்.