Homeசினிமாதமன்னாவின் நவம்பர் ஸ்டோரி - இணையத் தொடர் விமர்சனம்

தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி – இணையத் தொடர் விமர்சனம்

நடிகர்கள்: தமன்னா, ஜி.எம். குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ், மைனா நந்தினி, நமிதா கிருஷ்ணமூர்த்தி

இசை: சரண் ராகவன்

ஒளிப்பதிவு: விது அய்யன்னா

இயக்கம்: இந்திரா சுப்ரமணியன்

வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார்.

ஹாட் ஸ்டாரில் இதற்கு முன்பாக வெளியான ‘லைவ் டெலிகாஸ்ட்’ சற்று சொதப்பிய நிலையில், ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற த்ரில்லருக்கான அறிவிப்பு வந்தபோது, அதன் மீது பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆனால், தமன்னா, பசுபதி போன்ற சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக பார்க்க உட்கார்ந்தால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

துப்பறியும் கதைகளை எழுதும் சுகன் (ஜி.எம். குமார்) வயது முதிர்ச்சியால் அல்ஸைமர்ஸ் நோய் வந்து நினைவுகளை இழந்துகொண்டிருப்பவர். அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக தங்களிடம் உள்ள ஒரு பெரிய பழைய வீட்டை விற்க முயல்கிறார் மகள் அனுஷா (தமன்னா). அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் சுகன்.

இந்த நிலையில், ஒரு நாள் அந்த வீட்டிற்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடக்கிறது. அதற்கு அருகில் சுகன் அமர்ந்திருக்கிறார். அதிர்ந்து போகும் அனுஷா இந்த விவகாரத்தில் இருந்த எப்படியாவது தன் தந்தையை மீட்டுவிட வேண்டுமென நினைக்கிறார்.

சாட்சியங்கள் எல்லாம் சுகனுக்கு எதிராக இருக்கின்றன. உண்மையிலேயே சுகன்தான் அந்தக் கொலையைச் செய்தாரா, எதற்காகச் செய்தார் என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவரைக் காப்பாற்ற முயல்கிறாள் அனுஷா. வெற்றி கிடைத்ததா என்பது மீதிக் கதை.

ராஜேஷ் குமார் பாணியிலான ஒரு த்ரில்லர். வெவ்வேறு விதமான சம்பவங்கள். வெவ்வேறு தொடர்பில்லாத மனிதர்கள். அவை எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு கொலை. அதை விடுவிக்க முயலும் ஒரு பெண். புத்திசாலித்தனமான கொலைகாரன் என்று ஒரு நல்ல த்ரில்லருக்கான அடித்தளம் இந்தத் தொடரில் அமைந்திருக்கிறது.

கொலைகாரன் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே, அந்த நபர்தான் கொலையைச் செய்தது என்பதை பல பார்வையாளர்களால் எளிதில் யூகித்துவிட முடியும். ஆனால், இந்தத் தொடரின் சுவாரஸ்யம் என்பது, யார் கொலை செய்தார்கள் என்பதைச் சொல்வதில் இல்லை. மாறாக, ஏன் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த சுவாரஸ்யம் இறுதிவரை நீடிக்கிறது.

படத்தின் பிரதான பாத்திரமாக தமன்னாவின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தாலும், சிறப்பான பாத்திரமாக வந்திருப்பது கதாசிரியர் சுகனின் பாத்திரம்தான். அதை ஏற்று நடித்திருக்கும் ஜி.எம். குமார் பின்னியிருக்கிறார். பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவராக வரும் பசுபதிக்கும் பெயர் சொல்லக்கூடிய தொடர் இது.

ஆனால், இந்தத் தொடரின் பெரிய பிரச்சனை நீளம். பல காட்சிகள், பல ஷாட்கள் தேவையில்லாத நீளத்துடன் பொறுமையை சோதிக்கின்றன. திகைப்பூட்ட வேண்டும் என்பதற்காக பிரேதப்பரிசோதனை அறையில் வரும் காட்சிகளின் ஷாட்களை வெகு நீளமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

பாடகி செளந்தர்யா அம்பலப்படுத்தும் பாலியல் நபர்கள் – அதிர்ச்சி தகவல்
அவை தொடரின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக, கொட்டாவிவிட வைக்கின்றன. தவிர, hacking தொடர்பாக வரும் காட்சிகள் இந்தத் தொடரின் மையக் கதையோடு சுத்தமாகப் பொருந்தவில்லை.

அதிலும், ஒரு காவல்துறை அதிகாரியின் பாத்திரம் வந்து அவ்வப்போது கத்திவிட்டுச் செல்கிறது. இது இந்தத் தொடர் உருவாக்கும் மனநிலைக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. அந்தப் பாத்திரமே இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அதேபோல, இந்தக் கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியின் பாத்திரத்தை எப்படி வடிவமைப்பது என்பதிலும் இயக்குனருக்கு குழப்பம் இருந்ததைப் போலத் தெரிகிறது. பல சமயங்களில் கோமாளியைப் போலவும் பல தருணங்களில் புத்திசாலித்தனமான துப்பறிவாளரைப் போலவும் வந்துபோகிறது அந்த பாத்திரம்.

மிக மெதுவாகத் துவங்கி, மூன்றாவது எபிசோடில் வேகமெடுக்கும் திரைக்கதை ஆறு எபிசோடுகள் வரை சிறப்பாக நகர்கிறது. ஆனால், ஏழாவது எபிசோடில் உச்சகட்ட காட்சியை தேவையில்லாத நீளத்தோடு அமைத்து சொதப்பியிருக்கிறார்கள்.

பின்னணி இசையும் ஒலிப்பதிவும் காதுகளைச் சோதிக்கின்றன. தொடர் உருவாக்க நினைக்கும் பதைபதைப்பான மனநிலையைக் அதிகரிக்க பின்னணி இசை சுத்தமாக உதவவில்லை. மாறாக, ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது.

சில குறைகள் இருந்தாலும் நிச்சயமாக ரசிக்கக்கூடிய த்ரில்லர்தான் இந்த நவம்பர் ஸ்டோரி. ஆனால், குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.