Thu, Oct21, 2021
Homeசினிமாபிக்பாஸ் சீசன் 4 இறுதி வாரம்: டைட்டிலை வெல்வாரா ரம்யா பாண்டியன்?

பிக்பாஸ் சீசன் 4 இறுதி வாரம்: டைட்டிலை வெல்வாரா ரம்யா பாண்டியன்?

பிக்பாஸ் சீசன் 4 ல் ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களுக்கு கடும் சவாலாய் இருந்தவர் தான் ரம்யா பாண்டியன். தற்போது பிக்பாஸ் வீட்டில் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள ஆறு பேரில் ரம்யாவும் ஒருவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும் முன்னரே ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தவர் தான் ரம்யா. மொட்டை மாடி போட்டோ சூட் முதல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி வரை என குறுகிய காலத்தில் பிரபல்யமடைந்தவர் ரம்யா.

சினிமாவில் நட்சத்திரமான தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நெடுநாள் கனவில் அதற்கான தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி திருநெல்வேலியில் பிறந்துள்ளார் ரம்யா பாண்டியன், பள்ளிப்படிப்பை திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் முடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த ரம்யா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை புரிந்து வந்துள்ளார்.

ஆனாலும் அவருடைய சினிமா ஆர்வம் காரணமாக வீட்டில் அனுமதி இல்லாத நிலையிலும் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்

ஒரு காலத்தில் தமிழின் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியன் ரம்யா பாண்டியனுக்கு சித்தப்பா முறை. ரம்யாவின் தந்தை துரை பாண்டியன் ஆரம்ப காலங்களில் சினிமாப் படங்களுக்கான தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

ரம்யா முதலில் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் இயக்கிய மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் தான் நடித்திருக்கிறார். அதன் பின்னர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா.

ஜோக்கர் பட நாயகி

2015ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட் படமான டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

அதன் பின்னர் ரம்யா நடித்த ஜோக்கர் திரைப்படம் அவரின் நடிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கியது. இந்த திரைப்படத்திற்காக விருது ஒன்றையும் பெற்றுள்ளார் ரம்யா பாண்டியன்.

பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்திலும் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் ரம்யா எதிர்பார்த்த அளவு சினிமாவுக்கான வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத் தளங்களில் பதிவிடுவார்.

அவ்வாறு மொட்டை மாடியில் ரம்யா சாரியுடன் நடத்திய போட்டோ சூட் தான் அவரை திரும்பவும் பட்டி தொட்டியெல்லாம் விளம்பரப்படுத்தியது. இடுப்பைக் காட்டி சாரி கட்டியவாறு எடுத்த அந்த புகைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்தன.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்த ரம்யாவுக்கு பிக்பாஸ் சிசன் 4 இல் வாய்ப்புக் கிடைத்தது.

ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் போட்டிகளில் தனக்கான ஸ்கோரை உயர்த்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து விளையாடி வந்துள்ளார் ரம்யா. ஆண்களுக்கு நிகராக சளைக்காமல் விளையாடும் அவரது திறமையை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றார்கள்.

தற்போது நடிகை ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ஒரு படத்திலும் , மேலும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிப்பில் மட்டுமல்லாமல் ஓவியம் வரைவதிலும் நாட்டம் கொண்ட ரம்யா ஓவியக் கண்காட்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

தனது வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் பயிரிட்டு அதை பராமரித்து வருவது தான் ரம்யாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு.

கடந்து வந்த பாதையைப் பற்றி பிக்பாஸில் பேசிய ரம்யா பாண்டியன், சென்னை சத்யம் தியேட்டர் முன்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்கும் வேலையைத் தான் முதலில் செய்ததாக கூறினார். கல்லூரியில் படிக்கும் காலங்களில் பாக்கெட் மணிக்காக இதை அவர் செய்திருக்கிறார்.

இவ்வாறு தனக்கான முன்னேற்றத்திற்கு உரிய வழிகளை தேடிச் சென்று கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருப்பார் என பலரும் எதிர்பார்த்தவாறு இறுதிச் சுற்றுவரை வந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 பட்டத்தை வெல்வாரா ரம்யா பாண்டியன்? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க