Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

‘1000 ரூபாய் என்பது இலக்கு, அது இறுதியல்ல’ – எம். சந்திரகுமார் நேர்காணல்

ஆசிரியரும் ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளையும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம். சந்திரகுமார், கொழும்பு தமிழ் இணையத்துக்கு வழங்கிய நேர்காணல்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதிலுள்ள தடைகள் என்ன?

எமக்கு தலைமைத்துவத்தை கொடுத்த தலைவர்கள் அந்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அடித்தளத்தை இடவில்லையென்பது பிரதான குறைபாடு. கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களை கவனத்தில் கொண்டதுபோல் இரத்தினபுரி மாவட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை. இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் வாக்காளர்களின் தொகை குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி 72,000 வாக்காளர்கள் அளவிலேயே காணப்படுகின்றனர். இன்னும் பதிவு செய்;யப்படாத வாக்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் பதிவு செய்வதையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

தற்போது இரத்தினபுரியில் இருக்கக்கூடிய குறைந்தளவு வாக்குகளுக்கு பல கட்சியைச் சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியிடுவதும் ஒரு குறைபாடாகும். அது எங்களுடைய வெற்றிக்குத் தடையாக இருந்தது. தேர்தல் காலங்களில் இரத்தினபுரி போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் கூட வாக்களிப்பு வீதத்தை குறைத்திருந்தது. தற்போது இந்நிலை குறைந்திருக்கின்றது. கடந்த காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் மக்கள் வாக்களிப்பதைக்கூட தவிர்த்திருக்கின்றார்கள்.தேர்தலில் வாக்களிக்க வெறுப்பாக இருக்கின்றார்கள்.

வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கான தடையை நிவர்த்திசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்? 

2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்நிலைமை குறைவடைந்திருக்கின்றது. மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். வாக்களித்தால்தான் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவு மக்களக்கு பிறந்திருக்கின்றது. அதேபோல் நாங்களும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றோம். நீங்கள் பயமின்றி வெளியில் வாக்களிக்கும் பட்சத்தில் அந்த வாக்குகளுக்கு உரிய பர்துகாப்பை வழங்குவோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எல்லா பிரதேச சபைகளிலும் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கின்றோம். தனிப்பட்ட சின்னத்திலும் ஐக்கிய தேசிய முன்னணியிலும் தலைவர்களை உருவாக்கியிருக்கின்றோம். குறிப்பாக பலாங்கொடை பிரதேசத்தில் அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பிரதிநிகளை உருவாக்கியிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது இறக்குவாணை தேர்தல் தொகுதியில் ஒருவரையும் இரத்தினபுரி பிரதேச சபையிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையும் நிவித்திகலை பிரதேச சபையிலும், கலவானை பிரதேசத்தில் அயகம பிரதேசசபை, கொலன்ன பிரதேச சபை போன்றவற்றிலும் ஒவ்வொரு பிரதிநிதியை உருவாக்கியிருக்கின்றோம். இரத்தினபுரி மாநகரசபையில் ஒருவரும் பெல்மதுளை பிரதேச சபையில் இரு தமிழ் பிரதிநிதிகள் உருவாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக உதவி செய்திருக்கின்றோம். இவர்கள் உங்களை பாதுகாக்க கடமைப்பட்டுளார்கள்.

மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைச்சுக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளில் இரத்தினபுரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகின்றதே?

புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு மேலதிகமாக பிரதிநிதித்துவம் எங்கே கிடைக்கின்றது என்பதை பார்த்தும், வாக்குகள் எங்கே அதிகம் கிடைக்கின்றது என்பதை பார்த்தே அபிவிருத்திகள் செய்யப்படுகின்றது. இந்த கேள்வியில் ஒரு உண்மையும் இருக்கின்றது. இதற்கு முன்னர் அரசியலில் இருந்தவர்கள் பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றார்கள். ஆனால் அவை போதாது. தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் பல்வேறு அபிவிருத்திகளை செய்திருக்கின்றோம். குறிப்பாக மனோகணேசனின் அமைச்சினூடாக இப்பிரதேசங்களில் நடமாடும் சேவைகளை செய்து உதவியிருக்கின்றோம். பிரதிநிதித்துவம் இருந்திருந்தால் நேரடி அபிவிருத்தி உறுதியாக கிடைத்திருக்கும்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருக்கின்றோம். அதுமட்டுமல்லாது தோட்டபுறங்களில் அமைச்சின் மூலமாக நிதிகளைப் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு நிதிகளை வழங்கியிருக்கின்றோம். பாதை புனரமைப்பு, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மூன்று கோடிக்கும் மேற்பட்ட தொகை அமைச்சினால் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பல பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இவை அனைத்துமே எங்களுடைய ஒட்டுமொத்தமான தேவையையும் நிவர்த்தி செய்யவில்லை. நாங்கள் ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

பிரதானமாக இரத்தினபுரி மாவட்ட மக்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அதற்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?

இரத்தினபுரி மாவட்டத்தில் சகல மக்களும் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றார்கள். இது எல்லா மக்களையும் பாதிக்கின்றது. களுகங்கையை அண்மித்த பிரதேசங்கள் நீரேந்து பகுதிகளாகவும் அதிக மழையை பெறுகின்ற பிரதேசங்களாக இருப்பதாலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மழை அதிகமான காலப்பகுதிகளில் இறப்பர் தோட்ட மக்களும் தேயிலை தோட்ட மக்களும் உரிய நாட்கள் வேலை செய்ய முடியாத நிலை இருக்கின்றது. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் முன்னர் இருந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளது. இறப்பர் தோட்டங்களில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது. நான் வசிக்கும் தோட்டப்பகுதியில் முன்னர் 150 க்கும் மேற்பட்டோர் தொழில் செய்யும் நிலை இருந்தபோதும் தற்போது 50 பேரளவிலேயே தொழில் புரிகின்றனர். தோட்டகாணிகளில் இறப்பர், தேயிலைகள் அகற்றப்பட்டு கட்டுபொல், றம்புட்டான் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் வேலைவாய்ப்பு குறைவடைகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டபுற மக்களையும் கிராமபுற மக்களையும் இணைப்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. இம்மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். நாங்கள் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இங்குள்ள மூவின மக்களும் எங்களை தெரிவு செய்யும்பட்சத்தில் அதற்கு தேவையான சேவைகளை எங்களால் வழங்கமுடியும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வளப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முக்கிய பிரச்சினையாக ஊதியம் இருக்கின்றது. தற்போதைய தலைவர்கள் 1000 ரூபாவை நோக்கி நகர்கின்றார்கள். இது பொருத்தமானதா?

எல்லா மக்களுடைய சம்பளத்தையும் நிர்ணயம் செய்வதற்கு ஒரு நியதிகள் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த நியதிகளை கொண்டு சம்பளத்தை தீர்மானிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. எனவே 1000 ரூபாதான் சம்பளமா அதற்கு மேலான தொகையா என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். 1000 ரூபா என்பது அரசியலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கே தவிர, 1000 ரூபா என்பதே இறுதியல்ல. எனவே அதற்குரிய நியதிகளை உருவாக்கி சம்பள பிரச்சினையை தீர்க்க வேண்டும். 1000 ரூபா என்பது ஒரு இலக்கு. தொழிலாளர்களுடைய சம்பளமானது, சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கும் செயற்பாட்டுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும். 1000 ரூபா நோக்கி செல்லலாம். அதைவிடவும் அதிகரிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தல் காலத்தில் முன்வைக்கக்கூடிய பிரசாரக் கொள்கை என்ன?

மக்களுடைய சம்பளம் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினையில் நாங்கள் உரிய தலைமைத்துவத்தை வழங்கவேண்டுமென்பதே என்னுடைய முதலாவது நிலைப்பாடு. எனது மக்களுக்கு ஏனைய உரிமைகள் சலுகைகள் வேண்டும். முன்னர் மக்களுக்கு தேயிலைத்தூள் இலசவமாக வழங்கப்பட்டிருந்தது இன்று அவை வழங்கப்படுவதில்லை. அதுபோன்று பிள்ளைகளுக்கான போஷாக்கு உணவு. தொழில் ஆபத்துக்களின் போது நட்ட ஈடுகளை வழங்குவதும் அவசியமாகும். காணி வேண்டும். கல்வி எமக்கான உரிமை போன்ற விடயங்களே எனது பிரச்சாரக் கொள்கையாக இருக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் மூவின மக்கள் இருந்தாலும் குறிப்பாக, சிங்கள மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்?

இரத்தினபுரி மாவட்ட மூவின மக்களுடனும் நான் பழகியவன். இவர்களுடைய இன்ப துன்பங்களில் கலந்து கொண்டவன். மூவின மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். குறிப்பாக பௌத்த குருமார்களுடன் இணைந்து பல பணிகளை செய்துள்ளேன். சிங்கள சகோதரர்களுடன் இணைந்து இயற்கை அனர்த்தங்களின்போது பலருக்கும் கைகொடுத்துள்ளேன். எனவே அம்மக்கள் எம்முடன் இருக்கின்றனர். இரத்தினபுரி மாவட்ட முற்போக்கு சிந்தனை இளைஞர்களுடன் இணைந்து அரசியல் மற்றும் சமூக சேவைகளில் பணியாற்றியுள்ளோம். இவருக்கு வாக்களித்தால் இரத்தினபுரி மாவட்ட சிங்கள மக்களுக்கு குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்களா, அல்லது முன்னனெடுப்பதற்கு ஏதாவது திட்டம் உண்டா?

முஸ்லிம் வேட்பாளர் ஆளும்கட்சியில் இம்முறை நிறுத்தப்படவில்லை. எங்களுடைய ஐக்கிய மக்கள் சக்தியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவருடன் கலந்துரையாடியபோது உங்களுடைய வெற்றிக்கு எங்களுடைய ஆதரவை தருகின்றோம் என்பது அவருடைய கோரிக்கையாக இருந்தது. நான் இஸ்லாமிய மக்களுடனும் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டவன். மக்களிடைய இனவன்முறை ஏற்படும்போதெல்லாம் சர்வமத குழுக்களுடன் இணைந்து அதற்கு முகங்கொடுத்துள்ளேன். வெள்ள அனர்த்தப்பணிகளின் போது அம்மக்களுடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இஸ்லாமிய மக்களின் விழாக்கள் மற்றும் செயற்பாடுகளில் கலந்துகொண்ட நிலையில் எனக்கும் அவர்களுக்கும் நல்ல தொடர்பு இருக்கின்றது. நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் அதிகமான இஸ்லாமிய மாணவர்கள் என்னுடன் தொடர்புடன் இருக்கின்றார்கள். எனவே ஒரு வேட்பாளர் இல்லையென்பதற்காகவோ, அவரால் வெற்றிபெற முடியாது என்பதற்காகவோ எமக்கு வாக்களிக்காமல் எங்களுடைய உறவை பலப்படுத்துவதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்காகவும் இணைந்து செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் பல தமிழ் தலைமைகள் வேரூன்றிய போதும் மக்கள் அதனை நிராகரித்து சிங்கள தலைவர்களை தெரிவு செய்ததற்கான காரணம்?

தலைமைத்துவத்தில் இருந்த குறைபாடும் ஒரு காரணம். வாக்கு வங்கியைப் பார்த்து தலைமைத்துவங்கள் செயற்பட்டன. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களிலுள்ள வாக்கு வங்கி இங்கு கிடையாது. இங்கிருப்பது ஒரு குறுகிய வாக்கு வங்கி. இரத்தினபுரி மாவட்ட மக்களும் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு ஒரு பிரதிநிதி உருவாகவேன்டுமென்ற அக்கறை அவர்களுக்கு உருவாக வேண்டும். மக்களும் அவ்வப்போது கிடைக்கின்ற சலுகைகளுக்கு பெரும்பான்மையினத் தலைவர்களிடம் செல்லாமல், தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கிகொள்வதற்கு மக்களும் முனைப்பு காட்ட வேண்டும். இத்தேர்தலில் மக்களுக்கு அந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. சலுகைகளுக்காக பெரும்பான்மையினத் தலைவர்களிடம் செல்லாமல் எங்களுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும்.

கல்வி சமூகமும் இளைஞர்களும் உங்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும். நீங்கள் வெற்றிபெற்றால் அவர்களுக்கு என்ன திட்டத்தை முன்வைப்பீர்கள்?

இரத்தினபுரி மாவட்டத்தில் பல கல்விசார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு ஆசிரியராக அந்த பிரச்சினையை சந்தித்திருக்கின்றேன். எங்களுடைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு முறையான பாடசாலையொன்று காணப்படவில்லை. குறிப்பாக கணித, விஞ்ஞான பிரிவில் உயர்தரத்தை கற்பதற்கான பாடசாலை வசதிகள் இல்லை. அது மிகவும் பெரிய குறைபாடு. இரத்தினபுரி மாவட்டத்தில் 103 தமிழ் பாடசாலைகள் காணப்பட்டாலும் இந்த எந்தவொரு பாடசாலையிலும் விஞ்ஞான பிரிவிலும் கணிதத்துறையிலும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு வசதிவாய்ப்புகள் இல்லை. இது கல்வித்துறையில் மிகப்பெரும் குறைபாடு. இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் கூடிய தமிழ் பாடசாலை உருவாக வேண்டும். எனது அரசியல் பிரவேசத்துக்கான காரணமும் அதுதான். கடந்த நல்லாட்சியில் இரத்தினபுரி புதிய  நகரத்தில் பாடசாலைக்கான மூன்று ஏக்கர் காணி கிடைத்திருக்கின்றது. ஆனால் அங்கு பாடசாலையை நிறுவுவதற்கு ஆட்சி மாற்றம் எங்களுக்கு தடையாகவிருந்தது. தரம் 5 இல் சித்தி பெறுபவர்கள் சேர்வதற்கான வசதிகள் இல்லை.

வசதியானவர்கள் வெளிமாவட்டங்களில் கொண்டு சேர்க்கின்றார்கள். நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரத்தை கற்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக வெளிமாவட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் எங்களுடைய மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எங்களுடைய மாவட்டத்தில் பொருத்தமான பாடசாலையை உருவாக்கினால் நாம் வெளி மாவட்டங்களுக்கு செல்லத் தேவையில்லை. இங்கு பிரதானமாக நான்கு கல்வி வலயங்கள் இருக்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பாடசாலையொன்று குறைந்தபட்சம் உருவாக்கப்பட வேண்டும். இந்த கல்விப்பணியை செய்வதற்கே அரசியலில் பெரும் பணி எனக்கு இருக்கின்றது. ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், வெளிநாட்டு பயிற்சிகள் என்பனவும் அவசியம். ஆசிரியர், அதிபர்களுக்குரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.  இளைஞர்களும், யுவதிகளுக்கும் சரியான வழிகாட்டல்கள் தேவை. அதனை நான் வழங்கி எனது சமூகத்தின்  இளைஞர், யுவதிகளை அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

கடந்த தேர்தலில் வாக்களர்களுக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டது அந்நிலைமை இன்றும் இருக்கின்றதா?

அந்நிலைமை ஏற்கனவே இருந்திருக்கின்றது. கலவானை பிரதேசத்தில் பெரும்பாலும் சிற்றுடைமையாளர்கள் காணப்படுகின்றனர். அங்கு எங்களுடைய மக்கள் ஆங்காங்கு குறைந்தளவில் வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அங்கிருந்து வெளிவருவதென்பதே பெரும் போராட்டம். காவல் இடப்பட்டிருக்கின்றது. யாரும் உள்ளே செல்லமுடியாது. வெளியே வரவும் முடியாது. இவை தனியாருக்கு சொந்தமான தோட்டமாகும். இன்றும் நிவித்திகலை, கலவான பிரதேசத்தில் இப்பிரச்சினை முற்றுமுழுதாக நீங்கிவிடவில்லை. இம்மக்களை வெளிகொண்டு வந்து இத்தேர்தலில் வாக்களிக்க வைப்பது வேட்பாளராக என்னுடைய கடமையாகும். அம்மக்களை தைரியப்படுத்தக்கூடிய வகையில் அப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கின்றோம். இரத்தினபுரி பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு கலவான பிரதேசத்தில் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இருக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைபாடுகள் செய்திருக்கின்றார்கள். இருவாரங்களுக்கு முன்னால் பிரதி பொலிஸ்மா அதிபர் எம்மை அழைத்து, பிரச்சினைகள் தொடர்பில் வினவியிருந்தார். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. மக்களும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கவில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு ஆளும்கட்சி முயற்சிக்கும் நிலையில், அதை பெறமுடியாவிடின் உங்களுடைய ஆதரவை அவர்களுக்கு வழங்குவீர்களா?

அவர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது. அன்று ஜனாதிபதி தேர்தலில் இருந்த நிலை தற்போது இல்லை. ஜனாதிபதி தேர்தலில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டார்கள். பொதுத்தேர்தலில் பிரதமரும் கபினட் அமைச்சர்களும் தேர்வு செய்யப்படும் தேர்தல் இது. தற்போது பிரதமர் வேட்பாளராக போட்டியிடுபவர் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். மஹிந்த ராஜபக்ஷவை விட சஜித் பிரேமதாஸவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்கள்கூட சஜித்துக்கு வாக்களிக்க வேண்டுமென்ற என்னத்தில் இருக்கின்றார்கள். சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு மக்கள் மாத்திரம் காரணமல்ல. அக்கட்சியின் தலைமையும் காரணம். ஆளுங்கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விட அறுதிப் பெரும்பான்மைகூட கிடைக்கது. எனவே நாங்கள் வெற்றிபெறுவது நிச்சயமாகும்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்