ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
கூட்டணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
பிற்பகலில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என கூட்டணியின் பிரதித் தவிசாளர் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று (17) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்படவுள்ளனர். பொதுச்செயலாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரதி தவிசாளராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், பிரதி பொதுச்செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் தேசிய அமைப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.