Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

விளம்பரங்களை முடக்குகிறது கூகுள் க்ரோம்

நம் கணினியில் ஏதேனும் ஒரு தளத்தில் நாம் மிகுந்த ஆர்வத்தோடு செயலாற்றிக்கொண்டிருப்போம். அப்பொழுது தொடர்ந்து பல விளம்பரங்கள் வந்து தொல்லை செய்யும். தானாகப் பாட்டு பாடும்; தானாக வீடியோ ஓடத் தொடங்கிவிடும். எத்தனை தடவை மூடினாலும் மறுபடியும் மீண்டும் வந்து நம்மைக் கடுப்பேற்றும். ஒரு கட்டத்தில் டென்ஷன் தலைக்கேறி நாம் மொத்தத்தையும் இழுத்து மூடிவிடுவோம். இப்படி அம்பியை அந்நியன் ஆகிய தருணங்களை இணையதள பயனாளிகள் பலரும் சந்தித்து இருப்பார்கள்.

இனி அதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஏனெனில் ’இணையதள டான்’ ஆன கூகுள் தன் பிரௌசர் ஆன க்ரோமில் இனித் தேவையற்ற எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது என அறிவித்துள்ளது. இது இணைய பயன்பாட்டாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் க்ரோமில் இனி விளம்பரமே வராது என்று கூற முடியாது. ஏனெனில் இது விளம்பரத் தடை அல்ல. விளம்பரத்தை பிரித்தெடுக்கும் முயற்சி. அதாவது சிறந்த விளம்பரங்கள் உருவாக்குவதற்கான கூட்டணி அமைத்த விதிமுறைகளின் படி பல தேவையற்ற, பயனாளிகளுக்கு இடைஞ்சல் தரும் விளம்பரங்களை அனுமதிக்கும் தளங்களை கூகுள் கண்டுபிடித்து அவற்றுக்கு சம்மன் அனுப்பும். ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிடில் கூகுள் அந்தத் தளத்தில் இருக்கும் அனைத்து விளம்பரங்களையும் தானே தடை செய்யும். ஒரு தளத்தில் விளம்பரம் தடை செய்யப்பட்டால் அதைப் பயனாளர்களுக்கு அறிவிக்கவும் தவறாது. இந்தப் புது முறையின் மூலம் தடைசெய்த விளம்பரங்கள் பதிவிறக்கம் செய்வதையே மொத்தமாக தவிர்க்கும் க்ரோம்.

சென்ற ஆண்டு விளம்பரங்களின் மூலம் மட்டுமே 95 பில்லியன் வரவை ஈட்டிய க்ரோம், இணைய விளம்பரங்களின் உறைவிடம் என்றே கூறலாம். அத்தகைய க்ரோமில் அவற்றைத் தடை செய்வது என்பது சாத்தியமா என்பது சந்தேகமே. இதனால் பயனாளர்கள் இதர விளம்பரத் தடை மென்பொருள்களைப்(Chrome extensions) பயன்படுத்த மாட்டார்கள் என்பதை குறிவைத்தே க்ரோம் இந்தத் திட்டத்தை தொடங்கி உள்ளது என்று டெக் ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.

Chrome extensions பற்றித் தெரியாதவர்களுக்கு : எக்ஸ்டென்ஷன்ஸ் என்பது கூகுள் க்ரோம் வசதிகளை இன்னும் மேம்படுத்தும், எளிமையாக்கும் மென்பொருள். உதாரணத்துக்கு, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியாது. ஆனால், இதற்கு ஒரு கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன் உண்டு. அதை நிறுவிக்கொண்டால், ஒரே க்ளிக்கில் விரும்பிய புகைப்படத்தை சேமிக்கலாம். இதே போல, ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது தொடங்கி பல விஷயங்களுக்கு எக்ஸ்டென்ஷன்ஸ் உண்டு. கூகுள் வெப் ஸ்டோரில் இவற்றை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதன் பின், எந்த கணினியில் க்ரோம் திறந்தாலும், உங்கள் லாக் இன்னில் இந்த எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கும். அதனால் ஒவ்வொரு கணினியிலும் இதை நிறுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

‘எங்கள் தளத்தில் எந்த விளம்பரம் வர வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வேறொருவர் அதைக் கட்டுப்படுத்த முடியாது’ என பல இணையதள உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். இத்தகைய எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பயனாளர்கள் மத்தியில் நன்கு சென்றடைவதால் இந்த எச்சரிக்கை அனைத்தையும் சட்டை செய்யாமல் எப்பொழுதும் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன பல தளங்கள். ஆனால், 42 சதவிகித தளங்கள் தவற்றைத் திருத்திக்கொண்டன என கூகுள் அறிக்கை விடுத்துள்ளது.

இணையத்தின் அங்கமாக மாறிய விளம்பரங்கள் நமக்குப் பழகி விட்டன. எனினும் சில எல்லை மீறிய விளம்பரங்கள் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டியவை. இந்த முயற்சியின் மூலம் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

Latest news

Related news