வடக்கு, கிழக்கிலுள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வட்டார முறையில் ஓர் அரசியல் கட்சியின் சார்பில் ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்குக் கிடைத்த விகிதாசார அடிப்படையிலான ஆசனங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
எனினும், 3 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைப் பெற்ற கட்சிகள், பெண்களை விகிதாசார முறையில் நியமிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு, பெண்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் உள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களுமே, வடக்கு, கிழக்கில்தான் உள்ளன.
எனினும், முடியுமானளவுக்கு பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முயற்சிப்போம். இல்லையெனில், எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.