Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

புலிமுருகன்

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.

அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.

ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.

மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.

கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.

அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.

ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்