புதிய கூட்டணி உதயமாகிறது: பெயர் 21 ஆம் திகதி அறிவிப்பு

கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும்

புதிய கூட்டணி உதயமாகிறது: பெயர் 21 ஆம் திகதி அறிவிப்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து புதியதோர் அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளதாகவும், இந்த  கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அமைக்கப்படும் கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 21 ஆம் திகதி  அறிவிக்கப்படும் எனவும்,  விமல் வீரவன்ச எம்.பி தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார எம்.பி தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில எம்.பி தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் ஒன்றினையும் எனவும் அவர் தெரிவித்தார். 

தற்போதைய ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும், நாட்டின் அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் விதமான முடிவுகள் இப்போதே எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கும் அவர், மாற்று அரசியல் சக்தியாக தாம் உருவாவதாகவும் கூறினார்.