Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நிவர் புயல்; தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன?

நிவர் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த நவம்பர் 25ம் திகதி தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நிவர் புயலாக உருவெடுத்தது. இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே 25ம் திகதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26ம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது.

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிவர் புயலால் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை பகுதியில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவானது.

அதோடு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், தமிழகத்தின் வடமேற்கு மற்றும் தென் பகுதியில் மழை பொழிவு இயல்பாக இருந்ததாகவும், மத்திய தமிழகத்தில் மழை பொழிவு குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மழை நீர் சேகரிக்கப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இரண்டு கால்வாய்களிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். ஆரணி ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சென்னை நகரத்தின் முக்கியமான நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் தருவாயில், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச உயரமான 24 அடியில், 22 அடி வரை நீர் தேங்கியதால், முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

பின்னர் இது அதிகரிப்பட்டு 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் இருப்பு நிறைவாக இருப்பதால், 2021ல் கோடை காலத்தை சென்னை நகர மக்கள் சிரமப்படாமல் கழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயல் மழை பொழிவு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம்.

”மழை பொழிவால் சென்னையில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளில் உள்ள கிணறுகள் நிரம்பியுள்ளன. இந்த மழையால் அடுத்து வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்பது உண்மை.

ஆனால் ஒவ்வோர் ஆண்டும் கனமழை கொஞ்சம் பெய்தாலும் சென்னை நகரத்தின் பல்வேறு சாலைகள் முடங்குவது ஏன் என யோசிக்கவேண்டும். பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் சுத்தமாக இல்லை. இதனால், நிவர் புயல் போன்ற காலத்தில்கூட, மழை நீரை நிலத்தடிக்கு அனுப்புவதில் சிக்கல்கள் தொடர்கின்றன,”என்கிறார்.

மேலும், ”சென்னையில் முடிச்சூர், வேளேச்சேரி மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்கள் தொடர்ந்து வெள்ளக்காடாக மாறுகின்றன . இந்த இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் அனுமதி தருகிறார்கள்? 1960ல் சென்னையின் மக்கள் தொகை வெறும் ஆறு லட்சம்.

2020ல் சுமார் 80 லட்சமாக உள்ளது. இத்தகைய மக்கள் தொகை அதிகரிப்புக்கு பின்னரும் கூட, நகரத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை என்பதால் நீர் தேங்குவது பெரிய பிரச்சனையாக மாறுகிறது,” என்கிறார் அவர்.

அனுமதி இல்லாத கட்டடங்கள், முறையற்ற விதத்தில் கட்டிய பின்னர் அனுமதி பெறப்பட்ட கட்டடங்கள் என பலவிதமான கட்டடங்கள் நிறைந்த நகரமாகவும், திறந்த வெளி வெற்றிடங்கள் இல்லாத நகரமாகவும் சென்னை மாறிவருகிறது என்கிறார் வீரப்பன்.

”1960ல் சென்னை நகரத்தை கழுகு பார்வையில் பார்த்தால், வெறும் 30 சதவீத இடத்தில்தான் கட்டடங்கள் தென்பட்டன. தற்போது சுமார் 80 சதவீதம் வரை கட்டடங்கள் அமைந்துள்ளன.

வெறும் 20 சதவீதத்திற்கும் குறைவாகதான் வெற்றிடங்கள் உள்ளன. நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டால், இதுபோன்ற பேரிடரில் நகரத்தின் மைய பகுதிகளில் கூட மழை நீரை நிச்சயம் சேமிக்கமுடியும்,” என்கிறார் வீரப்பன்.

சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் உள்ள நீர் நிலைகளில் இருப்பு அதிகரித்துள்ளது. இந்த மழையால் அங்கு விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதோடு, குடிசை வீடுகள் விழுந்தன.

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காவிரி டெல்டா பாசன கூட்டமைப்பு சங்கத் தலைவர் இளங்கீரன் கூறும்போது, “கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் இந்த புயலில் இருந்து பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக இந்த புயலின் காரணமாக 10 சதவீதம் கூட நெற்பயிர்களுக்குப்‌ பாதிப்பு ஏற்படவில்லை.

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த மழையும் இந்த பருவநிலை காலத்திலும், இந்த புயலால் பெய்யவில்லை, அதே போன்று மோசமான காற்றும் வீசவில்லை. இதனால் பாதிப்புகள் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.

பயிர்கள் மூழ்கி இருந்தால்தான் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இருந்த காரணத்தினால் இந்த புயல் சேதத்தை ஏற்படுத்த வில்லையா? அல்லது அரசாங்கம்தான் விவசாயிகளுக்குச் சாதகமாகச் செயல்படவில்லையே இதற்கிடையில் நாமும் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணத்தில் விவசாயிகளைக் கடவுள் காப்பாற்றியுள்ளாரா? என்பது தெரியவில்லை,” என்கிறார் அவர்.

குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. அதே சமயம் விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என நம்புகிறோம் என்கிறார் இளங்கீரன்.

“இந்த புயல் பாதிப்பு பெரிதாக இருந்திருந்தால் நெற்பயிர் மற்றும் முந்திரி விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். புயல் வருவதற்கு முன்பு அனைவரும் பயந்து கொண்டிருந்தோம்.

தற்போது விளைந்திருக்கும் பயிர்கள் அனைத்தும் ஒன்றரை‌ முதல் இரண்டு மாத பயிர்களாகும். இதில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தண்ணீர் கட்ட தொடங்கினால் பயிர்கள் அழுகக்கூடும். அப்படி இருக்கும் சூழலில் இந்த புயலால் கடலூர் விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை,” என்று இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

இந்த கன மழையால் பெருமளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கினாலும் தற்போது தண்ணீர் தேங்காமல் பெரும்பாலான நிலங்களில் வடிந்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஓரளவு பயனளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், சேதங்கள் குறைக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தாலும், தாழ்வான பகுதிகளில் போதிய கவனம் கொடுக்கப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள்செல்வம்.

”பெருமாள் ஏரி, வீராணம் ஏரி ஆகியவை தூர்வாரப்பட்டிருந்தன. ஆனால் தாழ்வான பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் புகார் கொடுத்ததும்கூட, கட்டமைப்பை பலப்படுத்தவில்லை. கடலூரில் தேவனாம்பட்டினம் அருகே உள்ள முகத்துவாரம் தூர்வாரப்படவில்லை. இதனால் வெள்ள நீர் கடலுக்கு சென்று சேர்வதில் சிக்கல்கள் இருந்தன,” என்கிறார் அருள்செல்வம்.

இந்நிலையில், புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சேதம் குறைவாக இருந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவர் புயல் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை நகரத்தை பொறுத்தவரை, அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் அவர்.

இருந்தபோதும், சென்னை நகரத்தில் இருந்து சுனாமி மற்றும் பிற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்ட இடங்களான கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீரோடு கழிவு நீரும் வீடுகளில் தேங்கி நிற்பதாக புகார் செய்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கணக்கெடுப்பின்படி, கடலூரில் 4,720 ஏக்கர் நெல் மற்றும் மணிலா பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள், 200 ஏக்கர் காய்கறி விளை நிலங்கள், 737குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளார். வெள்ள நீர் வடிகால் பகுதிகள் மூலமாக வெளியேறிவிட்டதால், பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

நன்றி பிபிசி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x