இலங்கைவிளையாட்டு

நடப்பு சாம்பியன் – முன்னாள் சாம்பியன் இன்று மோதல்… விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது!

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அசத்தியது.

டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்பி இருப்பது 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.

வேகப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் எந்த அணிக்கும் சவால் அளிக்கும் வகையில் வலுவாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் திறனை நிச்சயம் பரிசோதிக்கும்.

கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் தனதாக்கியது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மற்ற துடுப்பாட்ட வீரர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் நன்றாக செயல்பட்டனர்.

இந்த நிலையில், இரு அணிகளும் தங்களது வெற்றிப்பயணத்தை தொடர மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பிற்பகலில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன், மற்றபடி வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி தொடரில் ஓவல் மைதானத்தில் சேசிங் செய்வது கடினமானதாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சி முக்கிய பங்கு வகிக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் உத்தேச பட்டியல்

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இந்திய அணியின் உத்தேச பட்டியல்

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close