டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்? - முக்கிய முடிவு

36 வயதான டேவிட் வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்? - முக்கிய முடிவு

டேவிட் வார்னர் மீதான தடை

36 வயதான டேவிட் வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 

இருப்பினும் களத்தில் அவர் செய்த குற்றத்திற்காக அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்க வாழ்நாள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியை தலைமை தாங்கும் கேப்டன் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அந்த தடையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும்  வார்னருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி, வீரர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் செய்து ஒப்புதல் வாங்கியிருக்கிறது 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதன்மூலம் கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து டேவிட் வார்னர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். இதற்கு முன்பு அப்படி தடையை எதிர்த்து விண்ணப்பிக்க இயலாது. 

இதன்மூலம் வாழ்நாள் தடையை எதிர்த்து டேவிட் வார்னர் தகுந்த விளக்கம், ஆதரங்களுடன் விண்ணப்பிக்க முடியும். எல்லாம் சரியாக இருந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கக் கொள்வது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும்.