‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’

0

‘கொரோனா என்பது, கோடையில் வரும் அம்மை நோய் போன்றது தான்; யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலில், டாக்டர்கள் இதை நன்கு புரிந்து, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

நம் உணவு முறைகளால், நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது; தைரியமாக இருந்தால் போதும்; கொரோனாவை விரட்டி விடலாம்’ என, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை பெண் மருத்துவர், சமூக வலைதளம் வாயிலாக, நம்பிக்கையூட்டி உள்ளார்,

தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் மட்டுமின்றி, மருத்துவர்களிடமும், அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பல்லோ புற்று நோய் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர், தன் குழுவில் சோர்வடைந்தவர்களுக்கு, கொரோனா குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பேசிய பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“ஒரு விடயத்தை, நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ், கோடை காலத்தில் உருவாகும், ‘அம்மை’ நோய் போன்றது தான்.

இது பயமுறுத்தும், ‘உயிர்கொல்லி’ வைரஸ் கிடையாது. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற வெளிநாடுகளில், பலர் இறந்தனர் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

அதை, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அங்கு, 60 முதல், 80 வயது உள்ளவர்கள் தான் இறந்தனர். இது, மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு தெரியும். வயது முதிர்ச்சி காரணமாக, சுவாசிப்பின் வேகம் குறையும்.

பொதுவாக, 50 வயது நபருக்கும், 90 வயது நபருக்கும், அதற்கான வித்தியாசத்தை நாம் உணரலாம். அதற்கு, நுரையீரலின் இயக்கமே காரணம்.

அதனால் தான், ‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யுங்கள். பிராணயாமம் என்ற, மூச்சு பயிற்சியை மேற்கொள்ளுங்கள்’ என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அப்போது தான், நுரையீரலின் இயக்கம் விரிவடையும்; சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் நிறைய கிடைக்கும் என்பது தான் உண்மை.

அச்சத்தால், நாம் வீட்டில் முடங்கி கிடப்பது, முட்டாள்தனமான, கோழைத்தனமான செயல். மருத்துவ துறையில் இருக்கும் டாக்டர்களே பயந்தால், மக்களின் நிலை என்னவாகும்.

டாக்டர்கள் தான் முன் வந்து, மக்களுக்கு அதை விளக்க வேண்டும். மாதக்கணக்கில் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியுமா? அச்சத்துடன் இருந்தால், நாம் செத்துதான் போகணும்.

அம்மை நோய் வந்தால், மருத்துவரிடம் சிகிச்சை பெறாமல், வீட்டிலேயே இருக்கிறோம். அதை மட்டும் கடவுள் என்கிறோம். அதில், பலர் இறந்ததும் உண்டு; அது, எவ்வளவு முட்டாள்தனமானது.

குழந்தைகளுக்கு, அதற்கான மருந்து உள்ளது. அதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால், இன்று அம்மை நோய் வெகுவாக குறைந்து விட்டது.

இதுதான், கொரோனா வைரஸின் நிலையும். இந்த வைரஸ் இன்று இல்லாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில், நிச்சயமாக அனைவருக்கும் வரும்.

அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது குழந்தைகளுக்கு, செலுத்தப்படும் தடுப்பூசி போல், செலுத்தப்பட்டால், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு, ‘கொரோனா’ வராது.

இதுதான் நடைமுறை; இதுதான் உண்மை. தயவு செய்து இதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ துறையில் உள்ள, டாக்டர்கள் இதை புரிந்து கொள்ளாவிட்டால், வேறு யார் புரிந்து கொள்வர்.

புரிந்து கொள்வதை விட, நமக்கான முக்கிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த கொரோனா, பெரிய நோயே அல்ல என்ற உண்மையை, மக்களிடம் சேர்ப்பது நம் கடமை. அந்த வகையில், நாம் மக்களின் பயத்தை போக்க வேண்டும்.

நம் உணவு முறைகளில், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் என, நிறைய சேர்த்துக் கொள்கிறோம். அதனால், நமக்கு இயல்பாகவே, தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.

என் தங்கை மகன், வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தால், அவனுக்கு அவ்வளவு மருந்து தேவைப்படுகிறது. இங்கு வந்த பிறகு, கொசு கடித்தால், அவனுக்கு புண்ணாகி விடும்; அவன் பிறந்த மண்ணின் தன்மை அது.

நம்ம மண்ணின் தன்மை, அப்படி இல்லை. இந்த மண், எந்த நோயையும் எதிர்கொள்ளும்சக்தி படைத்தது. தயவு செய்து, இதை புரிந்து கொள்ளுங்கள். இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நாம், மனதளவில் தைரியமாக இருந்தால், புற்றுநோயை கூட வெல்ல முடியும். நான், அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை பணியில், அதை உணர்ந்திருக்கிறேன்.

அனைத்து நோயாளிகளிடம், ‘நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என, நான் பேசியிருக்கிறேன். நோயாளிகள் தைரியமாக இருந்தால், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கும். அவர்கள் பூரணமாக குணமடைவர்.

கொரோனா வைரஸ் என்றால் என்ன; அது எப்படி நம்மை பாதிக்கிறது; அதில் இருந்து, நாம் எப்படி மீண்டு வருவது; இனி எப்படி இயல்பாக வாழ்வது என்பதை புரிந்துகொண்டு, நம் மனநிலையை மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நமக்கு, மூடத்தனம் வேண்டாம். இப்போது, அறிவியல் அனைத்தையும் தெளிவு படுத்துகிறது; அதை முழுமையாக நம்புங்கள்; அனைவருக்கும் தைரியம் கொடுங்கள்.

இங்கு யாரும், நோயை கண்டு அஞ்சும் கோழையாக இருக்க வேண்டாம். அனைவருமே, அதை எதிர்க்கும் வீரர்களாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் மருத்துவர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x