இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் டி20 உலகக்கோப்பை, சுற்று 1 - போட்டி முன்னோட்டம்

இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் டி20 உலகக்கோப்பை, சுற்று 1 - போட்டி முன்னோட்டம்

அதிர்ச்சி தோல்வியுடன் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை ஆரம்பித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, தமக்கு எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம், இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தினை எதிர்கொள்கின்றது.

ஆனால் நமீபிய அணியுடனான தோல்வி தொடரின் ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டிய விடயங்களை இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டியிருக்கின்றது. 

போட்டியின் முதல் 15 ஓவர்களிலும் திறமையாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸின் பிந்திய ஓவர்களில் (Death Overs) வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

அத்துடன் துடுப்பாட்ட வரிசை தொடர்பிலும் கேள்வி எழுகின்றது. அந்த கேள்வி கடந்த நான்கு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனுஷ்க குணத்திலக்கவிற்கு நமீபிய மோதலில் ஏன் வாய்ப்பளிக்கப்பட்டது என்பதாகும். 

வேகப்பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ளும் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக குணத்திலக்க இருந்த போதும் அவர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. எனவே அவரின் இடத்தினை சரித் அசலன்கவினை வைத்து பரிசோதித்து பார்க்க முடியும். 

சரித் அசலன்க ஆசியக் கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயினும் கடந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக காணப்படுகின்றார்.

ஆனால் பாராட்டப்பட வேண்டிய விடயம் இலங்கை அணியின் களத்தடுப்பாகும். நமீபிய மோதலில் இலங்கை அணியினர் அசாத்தியமான களத்தடுப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதன்படி இலங்கை அணிக்கு அடுத்த மோதல் தீர்க்கமான போட்டி என்பதால் கட்டாய வெற்றி ஒன்றினை பெற 100% பங்களிப்பை அனைத்து துறைகளிலும் இலங்கை வீரர்கள் வழங்க வேண்டும்.

ஐக்கிய அரபு இராச்சியம்

இலங்கை அணிக்கு கட்டாய வெற்றி ஒன்றை பெற வேண்டிய அழுத்தம் இருப்பதன் காரணமாக, அதன் மூலம் கிடைக்கும் சாதக நிலைமைகளை கருத்திற் கொண்டு ஐக்கிய அரபு இராச்சிய அணி வரலாற்றை மீண்டும் ஒரு முறை மாற்றி எழுதலாம்.

ஐக்கிய அரபு இராச்சிய அணி தமது முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியினைத் தழுவிய போதும் சிறந்த பந்துவீச்சினை குறித்த போட்டியின் இறுதி நேரம் வரை வெளிப்படுத்தியிருந்தது.

அத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சினை அவ்வணி வீரர்கள் வெளிக்காட்டியிருந்தனர். 

எனவே தமது பந்துவீச்சை இன்னும் பலப்படுத்தும் போது ஐக்கிய அரபு இராச்சிய அணி இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு அணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இலங்கையுடன் தோல்வியினைத் தழுவும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட முடியும். எனவே அவர்களும் வெற்றிக்காக தங்களது 100% முயற்சியினை வழங்க வேண்டும்.

உத்தேச இலங்கை அணி விபரம்

தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுசான்

உத்தேச ஐக்கிய அரபு இராச்சிய அணி விபரம்

சிராக் சூரி, முஹமட் வஸீம், காசிப் தாவூத், அரவிந்த், சவார் பரீட், பாசில் ஹமீட், சுண்டன்காபொயில் ரிஸ்வான், அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜூனைட் சித்திக், ஸஹூர் கான்