கட்டுரைசினிமாபெட்டிக்கடை

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கலை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டிஸ்னிக்கும், சோனிக்கும் என்ன பிரச்சனை?

டிஸ்னி நிறுவனத்துக்கு சொந்தமான மார்வல் காமிக் புத்தகத்தில், ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.

பல ஆண்டுகளாக இந்த கதாபாத்திரத்தை மார்வல் நிறுவனம் தனது காமிக் புத்தகங்களில் பயன்படுத்தி வந்தது. ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோவால் இந்த பாத்திரம் உருவாக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஸ்பைடர்மேன் படங்களை இணைந்து தயாரித்து லாபத்தை பிரித்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் மாதம், ஸ்பைடர்மேனின் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்துக்கு டாம் ஹோல்லாண்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நடித்து பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. பல படங்கள் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன.

இச்சூழலில்தான், ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் குறித்து எதிர்கால திட்ட முன்மொழிவை விடுத்த டிஸ்னியின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை என்றும், சோனி நிறுவனம் பரிந்துரைத்த மாற்று திட்டங்களுக்கு டிஸ்னி ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் திரைப்பட உரிமை சோனி நிறுவனத்திடம் இருப்பதால், இரு நிறுவனங்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே மீண்டும் ஸ்பைடர்மேனை திரைப்படங்களில் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

#SaveSpiderMan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது

டிஸ்னி – சோனி நிறுவனங்களுக்கு இடையேயான உடன்படிக்கையில் சிக்கல் குறித்த தகவல் வெளியானதை அடுத்து ஸ்பைடர்மேன் ரசிகர்கள் #SaveSpiderMan என்ற ஹாஷ்டேக்கை உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முக்கியமாக, ஸ்பைடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த டாம் ஹோல்லாண்டின் துருதுரு நடிப்பும், திரையில் ரசிகர்களிடம் டாம் ஏற்படுத்திய தாக்கமும்தான் ட்விட்டரில் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் உருக காரணம். டாமின் எதிர்காலத்தை சோனி வீணடித்துவிட கூடாது என்கிறார்கள் சமூக ஊடக பயனர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close